பதிப்புரை | மாறித் தமிழகத்தை ஆட்சி புரிந்தது. சமணம், பௌத்தம், வைணவம், சைவம் என்று வெவ்வேறு சமயங்கள் தமிழ்ச் சமுதாயத்தில் தழைத்தன. களப்பிரர் காலத்தில் தொடங்கிய வடமொழிச் செல்வாக்கு தொடர்ந்தது; நிலைத்தது. இறுதியாக ஆட்சிக்கு வந்த பிற்காலச் சோழர்கள் காலத்தில்தான் நாட்டில் அமைதி நிலவியது; சமயங்களும் கலைகளும் செழித்தன; இலக்கியங்களும் இலக்கணங்களும் பெருகி வளர்ந்தன. இவை எல்லாம் புதிய இலக்கணம் தோன்றுவதற்கு நல்ல சூழலை உருவாக்கின5 என்பது பொருந்துவதே. என்றாலும் இந்தச் சூழலை உருவாக்கப் பெரும் பங்கு வகித்தது மொழிவளர்ச்சி. இதனையே, “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்” (நன். 141) என்றும், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே.” (நன். 462) என்றும் பவணந்தி முனிவர் குறிப்பிடுகிறார். சங்க இலக்கியங்களின் மொழி அமைப்பை முழுமையாக விளங்கிக்கொள்ளத் தொல்காப்பிய விதிகள் போதியனவாக இல்லை என்ற எண்ணம் ஏழு எட்டாம் நூற்றாண்டுகளில் தோன்றியிருக்கக் கூடும். அதோடு திருக்குறள், நாலடியார் போன்ற அறநூல்கள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்கள், தேவாரம், திவ்வியப் பிரபந்தம் போன்ற பக்திநூல்கள், வில்லி பாரதம், கம்ப ராமாயணம் போன்ற இதிகாச நூல்கள், பெரிய புராணம் போன்ற புராண நூல்கள் என்று சங்க இலக்கியங்களுக்குப் பின்னர்த் தமிழில் ஒரு இலக்கியப் பூங்காடே மலர்ந்தது. யாப்பருங்கலம், வீரசோழியம், தண்டியலங்காரம் போன்ற புதிய இலக்கணங்கள் தோன்றி ஐந்திலக்கணக் கோட்பாட்டை வலிவுறச் செய்தன. இலக்கிய இலக்கண மரபுகளைப் போலவே உரைமரபும் வளர்ந்தது. களவியல் உரை, யாப்பருங்கல விருத்தி, இளம்பூரணர் உரை, காப்பிய உரைகள் முதலியன தோன்றின. தொல்காப்பியத்துக்குப் பின்னர் ஏற்பட்ட இலக்கிய இலக்கண வளர்ச்சியால் தமிழ்மொழியின் அமைப்பில் நிகழ்ந்திருந்த மாற்றங்களை இளம்பூரணர் நன்றாக உணர்ந்திருந்தார். அவை அனைத்தையும் தொல்காப்பிய விதிகளுக்குள் அடக்கிவிட முடியாது என்பதை அறிந்து அவற்றுள் சிலவற்றைத் தம்முடைய உரையில் அவர் எடுத்துக்காட்டினார். அதனால் தொல்காப்பியத்துக்கும் வளரும் தமிழுக்கும் இடையே _________________________ 5க.ப. அறவாணன், எழுநூறு ஆண்டுகளில் நன்னூல், சென்னை, 1977. பக். 25; இராம. சுந்தரம், நன்னூல்-சொல்லதிகாரம் (இலக்கணக் கருவூலம் 2), அண்ணாமலைநகர், 1987. பக். 171. | |
|
|