பக்கம் எண் : 91
  

பதிப்புரை
 

புணர்மொழிகளைப் பிரிக்கவோ சேர்க்கவோ அவர்கள் முயலவில்லை. பழம்பதிப்புகளில்
உள்ள குறைபாடு இதுவே.

     ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை, சாமிநாதையர் போன்ற பழம்பெரும்
பதிப்பாசிரியர்கள் ஏடுகளில் இருந்த தமிழ் நூல்களை இயன்ற வரையில் உண்மைப்
பாடமாகப் பழைய வடிவத்தில் பதிப்பிப்பதையே தங்களது தலைமைக் குறிக்கோளாகக்
கொண்டிருந்தனர். எனவே சொற்களைச் சந்தி பிரித்துப் பதிப்பிப்பதற்கு அவர்கள்
அவ்வளவு முக்கியத்துவம் தரவில்லை என்று தோன்றுகிறது. இலக்கண மாணவர்களின்
அன்றைய கல்வித்தரத்துக்கு அது தேவை இல்லை என்றும் அவர்கள் கருதியிருக்கக்
கூடும். அதனால் பழம்பதிப்புகளில் ஒரே தொடர் வெவ்வேறு வகையாகக் காணப்படும்.
காட்டாக ஆசிரிய வசனம், இசையெச்சம், குறிப்பு வினைச்சொல், முதனிலைத
 தொழிற்பெயர், வினையால் அணையும் பெயர் போன்ற இலக்கணக் கலைச்சொற்கள்
ஒரே பதிப்பில் ஒரு இடத்தில் ஒரு சொல்லாகச் சேர்த்தும் ஒரு இடத்தில்
பன்மொழித்தொடராகப் பிரித்தும் அச்சிடப்பட்டிருக்கும்.

     இதுபோலவே என்னுதலிற்றோவெனின், உணர்த்துதனுதலிற்று,
வகுத்துணர்த்துதனுதலிற்று, ஓத்துறுப்பாமாறுணர்த்துதனுதலிற்று, நிறுத்தமுறையானே
முதலிய உரைமரபுத் தொடர்கள் ஏடுகளில் எழுதியிருந்தவாறே நீண்ட
சொல்மாலைகளாகப் பழைய பதிப்புகளில் அச்சிடப்பட்டுள்ளன.

     பதிப்பாசிரியர்கள் யாரும் இத்துறையில் கவனம் செலுத்தவே இல்லை என்று
சுட்டிக்காட்டுவதற்காக இந்த உதாணரங்களை எடுத்துக்காட்டியுள்ளதாகக்
கொள்ளக்கூடாது. ஆறுமுக நாவலரின் நன்னூல் விருத்தியுரைப் பதிப்பைத் (1851)
தண்டபாணிதேசிகரின் விருத்தியுரைப் பதிப்போடு (1957) ஒப்பிட்டு நோக்கினால் ஒரு
நூற்றாண்டில் இத்துறை அடைந்துள்ள வளர்ச்சியைக் கண்கூடாகக் காண முடியும்.
ஆனால் வளரும் தமிழியலுக்கு இந்த வளர்ச்சி போதாது; அதுவும் இந்தக் கணிப்பொறி
யுகத்தில் இது நிச்சயம் போதாது.


     மொழியியல் தமிழியலுக்கு நன்றாக அறிமுகமான பிறகு இலக்கண ஆராய்ச்சி
புதுப் பரிமாணத்தில் வளர்ந்தது; இலக்கணக் கோட்பாடுகளில் புதிய சிந்தனைகள்
உருவாயின. முதல்வினை, துணைவினை, கூட்டுவினை போன்ற வினையின் வகைகள்,
தொகைகள், இடைச்சொற்கள், உரிச்சொற்கள், தொடரியல் உறுப்புகள், வாக்கிய
அமைப்பு, வாக்கிய வகைகள் முதலியன தனித்தனியே ஆழமாக ஆராயப்பட்டன;