| பதிப்புரை | நின்றது (நூ. 456) என்றும் குறிப்புரை வரைவார். இதுபோலவே, “ஆம் என்னும் பெயரெச்சம் ஒலி என்னும் பெயரோடு முடிந்தது.” (நூ. 58) என்று எச்சத்துக்கும் அவர் முடிபு கூறுவார். ஆகவே இந்த நூற்பாவின் (நன். 147) பொழிப்புரையில், ‘இருவும் ஆம்’, ‘ஒரோவிடத்து யகரமும் ஆம்’, ‘மொழியிறுதி ஆகாரம் ஆம்’ என்று சங்கர நமச்சிவாயர் எழுதியுள்ள, ‘ஆம்’ என்பன பத்தும் வினைப் பயனிலைகள். பொழிப்புரையை அடுத்து வரும், “மேல், “திரியும்” (நூ. 146) எனப் பொதுவிதி போந்தவற்றுள் பயின்று வருவனவற்றிற்குத் திரிபு கூறி, ஏனைய வந்தவழிக் காண்க என்பார். இகரமும் ஆகும் எனப் பயனிலை கொடுத்து முடியாது, ‘இகரமும்’ என அவாய்நிலையாக முடித்தார்.” என்ற அவரது விளக்கம் இதனைத் திரிபறத் தெளிவுபடுத்தும். அன்றியும் உதாரணப் பகுதியில் இவை அனைத்தையும் எழுவாய்க்கு ஏற்ப, ‘ஆயிற்று’, ‘ஆயின’ என்று ஒருமைப் பன்மை ஈறுகள் தோன்ற அவர் விரித்தே எழுதுவார். எனவே பயனிலையாகச் செயல்படும், ‘ஆம்’ என்னும் வினைமுற்றைத் தனிச்சொல்லாகப் பிரித்துப் பதிப்பிப்பது சிறப்பு. ஒலிநயம் குறைந்து பிளவுபட்டு ஒலித்தாலும் பொருள் தெளிவுக்கு இந்த முறையே ஏற்றது. இவ்விதி, “மொழி முதற்காரணம் ஆம் ஒலி” (நூ. 58) என வரும் பெயரெச்சத்துக்கும் பொருந்தும். உரையில், ‘கண்ணிற் காணலாம்’ (நூ. 318) என்று துணைவினையாகவும், ‘பனுவல் அன்றாம்’ (நூ. 55), ’வருவனவாம்’ (நூ. 62), ‘இரட்டாவாம்’ (நூ. 247), ‘கொண்டனவாம்’ (நூ. 346) என்று இடைச்சொல்லாகவும், ‘ஆம்’ என்பது செயற்படும் போது அதனை முன் நிற்கும் சொல்லோடு சேர்த்துப் பதிப்பிப்பது நல்லது. ‘ஆம்’ என்பது எல்லா" இடத்திலும் எல்லாச் சொல்லிலும் வரும் அசைச்சொற்களுள் ஒன்று எனப் பவணந்தி முனிவர் (நன். 441) குறித்திருந்தாலும் அந்நூற்பாவின் உரையைத் தவிர வேறு எங்கும் சங்கர நமச்சிவாயர் இந்த அசைச்சொல்லைக் குறிப்பிடாதது ஆராயத் தக்கது. அடுத்ததாக மேற் கூறிய என்னும் தொடரை நாம் எடுத்துக்கொள்ளலாம். சங்கர நமச்சிவாயர் இத்தொடரை ஏறக்குறைய முப்பது இடங்களில் பயன்படுத்தியுள்ளார். பழைய பதிப்பாசிரியர்கள் இந்தத் தொடரை ஒரு சொல்லாகக் கொண்டு, சேர்த்துப் பதிப்பித்துள்ளனர். ‘மேற்கூறு’ என்று ஒரு கூட்டுவினை வழக்கில் இல்லாததால் மேற்கூறிய என்பதைப் பெயரெச்சம் என்று கொள்ள முடியாது. அப்படி ஒரு கூட்டுவினையை வலிந்து அமைப்பது சங்கர நமச்சிவாயரின் சொல்லாட்சிக்குப் பொருந்தாது என்றும் தோன்றுகிறது. | |
|
|