பக்கம் எண் : 95
  

பதிப்புரை
 

     அவருடைய உரையில், ‘மேல் உரைத்தவாறு’ (நூ. 92), ‘மேற் காட்டிய’ (நூ. 270),
‘மேற் சொன்ன’ (நூ. 154), ‘மேல் நின்ற’ (நூ. 249), ‘மேற் போந்த’ (நூ. 296), ‘மேல்
வரும்’ (நூ. 96), ‘மேல் விதந்த’ (நூ. 207) முதலிய தொடர்கள் பயின்று வருகின்றன.
மேற்கூறு என்பதைக் கூட்டுவினை என்று கொண்டால் மேற்காட்டு, மேற்சொல்,
மேற்போ என வெவ்வேறு கூட்டுவினைகளைப் புதிதாக அமைத்தாக வேண்டும். இது
எளிய தீர்வாக இருக்காது. அன்றியும், ‘மேல் தொகுத்தும் வகுத்தும் கூறிய’ (நூ. 15),
‘மேல் விதந்து கூறலின்’ (நூ. 134) என்னும் தொடர்களில் பிற சொற்கள் இடையில்
வந்து அது பிரிந்து நிற்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே
இத்தொடரைச் சேர்ந்து அச்சிடுவதை விட மேற் கூறிய எனப் பிரித்து அச்சிடுவது
சிறந்ததாகத் தோன்றுகிறது. இம்முடிபு இக்காலத் தமிழ்நடைக்குப் பொருந்துமா என்பது
மேலும் ஆராயப்பட வேண்டும். இருந்தாலும் சங்கர நமச்சிவாயரின் சொல்லாட்சியைக்
கருதி அத்தொடர் இப்பதிப்பில் பிரிக்கப்பட்டுள்ளது.

     இனி, உடைய என்பது, ‘சாத்தனுடைய கை’ (நூ. 300) என்று சொல்லுருபாக வரும்
போது சேர்த்தும், ‘நான்கு திருமுகங்களை உடைய கடவுள்’ (நூ. 56) என்று ஐயுருபை
அடுத்துக் குறிப்புப் பெயரெச்சமாக வரும் போது பிரித்தும் அச்சிடப்பட்டுள்ளது.
இதுபோலவே உவமவுருபாகிய போல என்பது ஐயுருபின்றிக், ‘குருவிபோலக்
கூப்பிட்டான்’ (நூ. 367) என்று வரும் போது சேர்த்தும் அதுவே இரண்டாம் வேற்றுமை
உருபை அடுத்துத், ‘துடியைப் போலச் சுருங்கிய இடை’ (நூ. 367) என்று விரிந்து வரும்
போது பிரித்தும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மாற்று வடிவமாகிய போல் என்பதற்கும்
பற்றி என்னும் பின்னொட்டுக்கும் இந்த விதி பொருந்தும்.

     எதிர்மறை வாக்கியங்களில், ‘இவ்வரையறை இல்லை’ (நூ. 130), ‘குறை இலன்’
(நூ. 321), ‘காலம் இன்று’ (நூ. 382), ‘அது பொருள் அன்று’ (நூ. 20) ‘இவை
பெருவழக்கு அல்ல’ (நூ. 138) என்று வரும் இல்லை, இலன், இன்று, அன்று, அல்ல
என்னும் குறிப்பு வினைமுற்றுகள் தொடரியலை நோக்கிப் பிரித்துப்
பதிப்பிக்கப்பட்டுள்ளன. உள, உள்ளன, உளர் என்னும் உடன்பாட்டுக் குறிப்பு
வினைமுற்றுகளுக்கும் இந்த விதி பொருந்தும். கொள், பெறு போன்ற துணைவினைகள்,
‘கண்டுகொள்க’ (சிற. பாயி) ‘வரப்பெறும்’ (நூ. 157) என்று சேர்த்துப்
பதிப்பிக்கப்பட்டுள்ளன. வேண்டு, தகு போன்ற135 துணைவினைகள், ‘விதந்து கூற
வேண்டும்’ (நூ. 20), இச்சோறு உண்ணத் தகும்’ (நூ. 339) என்று பிரித்து
அச்சிடப்பட்டுள்ளன.
------------------------------
     135இத்தகைய துணைவினைகள் ஐம்பதுக்கும் மேலாகக் காணப்படுகின்றன.