| பதிப்புரை | விவாதத்துக்கு உரியது எனினும், ‘உய்த்துணர்ந்து களைக’ (நூ. 380) என்னும் வழக்கை நோக்கி, ‘உய்த்துணர்ந்து கொள்க’ (நூ. 356) என்றும் கலைச்சொல் எனினும், ‘வினையால் அணையும் காரணக்குறி (நூ. 275), ‘குறிப்பு வினையால் அணைந்த எட்டுப் பெயர்களும் (நூ. 280) என்னும் ஆட்சி நோக்கி, ‘வினையால் அணையும் பெயர்’ (நூ. 319) என்றும் உரைமரபுத் தொடர் எனினும் பொருள் தெளிவைக் கருதி, ‘என் நுதலிற்றோ எனின்’ (சிற. பாயி.) என்றும் பிரித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. ‘ஒருசார்’ (நூ. 63), ‘ஒருசாரார்’ (சிற. பாயி.), ‘ஒரோவழி’ (நூ. 9), ‘ஒரோவிடத்து’ (நூ. 147), ‘ஒரோவொன்று’ (நூ. 199), ‘கூறுவதோர்’ (நூ. 162), ‘நிற்பதொன்று’ (நூ. 73) முதலிய தொடர்கள் நடைமரபு நோக்கி இப்பதிப்பில் பிரிக்கப்படவில்லை. இங்ஙனம் சொற்களைப் பிரிக்கவும் சேர்க்கவும் இப்பதிப்பில் கடைப்பிடிக்கப்பட்டுள்ள விதிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றுள் பெரும்பாலன தற்காலிகமானவை; மேலும் திருத்தம் பெற வேண்டியவை. தொகைமொழிகள், கூட்டுவினைகள், துணைவினைகள், இடைச்சொற்கள் முதலியவற்றை இன்னும் விரிவாக ஆராய வேண்டும். எனவே இந்த விதிகளை மேன்மேலும் இங்கு எடுத்துக்காட்டவில்லை. ஒரு நல்ல நாளில் ஊர் கூடித் தேர் இழுத்துத் திருவிழாக் கொண்டாடுவதுபோலத் தமிழ் அறிஞர்களும் எழுத்தாளர்களும் பதிப்பாசிரியர்களும் என்றாவது ஒன்று கூடிக் குழு அமைத்துச் சந்திக் குறியீடுகளை வகுப்பார்கள். அதுவரையில் உரையாசிரியர்களின் உரைநடையை எல்லோரும் எளிதாகப் புரிந்துகொள்ள இந்த விதிமுறைகள் உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறே நூற்பாவின் தலைப்பு, நிறுத்தக் குறியீடு, பத்திகளின் அமைப்பு, அடிக்குறிப்பு முதலிய பகுதிகளும் இப்பதிப்பில் ஆராய்ந்து அமைக்கப்பட்டுள்ளன. கற்போரின் தெளிவு ஒன்றே என் குறிக்கோள் என்பதால் பழைய பதிப்புகளிலிருந்து இவை சிறிது வேறுபட்டிருக்கும். அறிந்து செய்துள்ள இந்த வேறுபாடுகள் ஆய்வின் வளர்ச்சியையும் பதிப்பின் தரத்தையும் எடுத்துக்காட்டும். ஆய்வுலகு இவற்றின் பயன் உணர்ந்து கணிக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. | | நன்றி | நல்ல பணிக்கு நாலு பேர் உதவுவது உலகியல். அந்த முறையில் இப்பணியில் எனக்குப் பலர் உதவினர். அவர்களுக்கு என் நிறைநெஞ்ச நன்றியைத் தெரிவிப்பது தலையாய கடமை. நன்னூல் விருத்தியுரையை எனக்குக் கற்பித்த ஆசிரியர் (1955-56) திரு ச. தண்டபாணி தேசிகர், மயிலாடுதுறை; பதிப்புக் கலையை எனக்குக் கற்பித்தவர் | |
|
|