1


கடவுள் துணை

அகப்பொருள் விளக்கம்

மூலமும் உரையும்

சிறப்புப்பாயிரம்

பூமலி நாவன் மாமலைச் சென்னி
ஈண்டிய விமையோர் வேண்டலிற் போந்து
குடங்கையின் விந்த நெடுங்கிரி மிகைதீர்த்
தலைகட லடக்கி மலையத் திருந்த
இருந்தவன் றன்பால் இயற்றமி ழுணர்ந்த
புலவர்பன் னிருவருட் டலைவ னாகிய
தொல்காப் பியனருள் ஒல்காப் பெரும்பொருள்
அகப்பொருள் இலக்கணம் அகப்படத் தழீஇ
இகப்பருஞ் சான்றோர் இலக்கிய நோக்கித்
தொகுத்து முறைநிறீஇச் சூத்திரம் வகுத்தாங்
ககப்பொருள் விளக்கமென் றதற்கொரு நாமம்
புலப்படுத் திருளறப் பொருள்விரித் தெழுதினன்
மாந்தருந் தேவரும் வாழ்த்தமுக் குடைக்கீழ்
ஏந்தெழில் அரிமான் ஏந்துபொன் னணைமிசை
மதிமூன்று கவிப்ப உதய மால்வரைக்
கதிரொன் றிருந்தெனக் காண்டக இருந்து
தத்துவம் பகர்ந்தோன் சரணம் பொருந்திய