இனி அகலங் கூறுமாறு: இச் சூத்திரத்துள் மலர்தலை என்பதியாதோ வெனின் வினைத்தொகை எனக் கொள்க. வினைத்தொகையாவது ஒருகாலத்திற்கே உரித்தாகாது, மூன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்பதாம். மூன்று காலமாவன இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்பனவாம். அஃது அவற்றோடு வருங்கால் மலர்ந்த என்றும், மலராநின்றவென்றும், மலரும் என்றும் வரும். அவற்றுள் ஈண்டு மலர்ந்த என்பதே பொருளாம். தலையுலகத்து என்புழி இரண்டாம் உருபும் ஏழாம் உருபும் தொக்கன. புலவோர் என்னும் எழுவாய்க்கு ஆய்ந்த என்னும் வினை பயனிலையாம். ஆயினும், அது பெயரெச்ச வாய்பாடு ஆதலான், அருந்தமிழ் என்னும் பெயரோடு முடிந்தது. அருந்தமிழ் அகப்பொருள் என்புழி ஏழாம் உருபு தொக்கது. அகப்பொருள் என்னும் எழுவாய், பெற்றித்து என்னும் குறிப்புவினை கொண்டது. கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என உம்மைத் தொகையாய் ஏழென்னுந் தொகை பெற்றன. என என்பது எண்ணிடைச்சொல். (1) அகப்பொருள் சொல்லப்படும் திறன் 2. அதுவே புனைந்துரை யுலகியல் எனுந்திறம் இரண்டினுந் தொல்லியல் வழாமற் சொல்லப் படுமே. இச்சூத்திரம் மேற்சொல்லப்பட்ட அகப்பொருட்குரிய விதி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அதுவே---அவ்வகப்பொருள் இல்லதும் உள்ளதுமாகிய இரண்டு கூறுபாட்டானும் பழைய நெறி பிழையாமற் கூறப்படும் என்றவாறு. என்னை? 1"நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கங் கலியே பரிபாட் டாயிரு பாங்கினும் உரிய தாகும் என்மனார் புலவர்" என்றாராகலின். (2)
1. தொல், பொருள், அகத்திணையியல், சூ. 53.
|