114

செவ்வி யருமை செப்பலும் தலைவன்
செவ்வி யெளிமை செப்பலும் பாங்கி
என்னை மறைப்பி னெளிதென நகுதலும்
அந்நகை பொறாஅ தவன்புலம் பலும்அவள்
தேற்றலும் கையுறை யேற்றலும் கிழவோன்
ஆற்றலும் என்னும் அவ்வொன் பானும்
குறைநேர் தற்குமடற் கூற்றொழி தற்கும்
முறைமையி னுரிய முன்னும் காலே.

இதுவுமது.

(இ - ள்.) தலைவி இளமைத்தன்மை பாங்கி தலைவற்குணர்த்தல் முதலாகக் கிழவோன் ஆற்றல் ஈறாகச் சொல்லப்பட்ட ஒன்பதும் பாங்கி குறைநேர்தற்கும் தலைமகன் மடற்கூற்றொழிதற்கும் முறையானே உரியவாங் கருதுங் காலத்து என்றவாறு.

தலைவியின் இளமைத்தன்மையைப் பாங்கி தலைவற்குணர்த்தற்குச் செய்யுள்:

1"களவரும் பாகரு நீலங்கள் காமக் கடவுளுமால்
கொளவரும் பாபைங் குரும்பைக் குலஞ்செங் குமுதத்து வெண்
டளவரும் பாநண்ப னேதஞ்சை வாணன் றமிழ்வையைநாட்
டிளவரும் பாமிவண் மாட்டென்கொ லோநின் றிரப்பதுவே"

எனவும்,

2"நெறிமருப் பெருமை நீல விரும்போத்து
வெறிமலர்ப் பொய்கை யாம்பன் மயக்குங்
கழனி யூரன் மகளிவள்
பழன வெதிரின் கொடிப்பிணை யலளே"

எனவும் வரும்.

தலைவன் தலைவி வருந்தியவண்ணம் உரைத்தற்குச் செய்யுள்:

3"சிலைபயில் வாணுதன் மின்னே பிறந்தவச் செவ்வியிலே
கொலைபயி னாகக் குருளையைப் போற்குறி யோனிருந்த
மலைபயில் வார்தமிழ் வாணன்றென் மாறை மயிலனையாள்
அலைபயி லால்விழி யாலென தாவி யணங்கினளே"

எனவும்,



1. த. கோ. செ: 108.

2. ஐங்குறு. செ: 91.

3. த. கோ. செ: 109.