118

அறியாள் போன்று குறியாள் கூறலும்
பாங்கி இறையோற் கண்டமை பகர்தலும்
பாங்கியைத் தலைவி மறைத்தலும் பாங்கி
என்னை மறைப்ப தென்னெனத் தழாஅலும்
கையுறை புகழ்வுமென் றிவ்வுரு மூன்றும்
மெலிதாகச் சொல்லிக் குறைநயப் பித்தற்கும்
வலிதாகச் சொல்லி மறுத்தற்கு முரிய.

இதுவும் அது.

(இ - ம்.)இறைவன் றனக்குக் குறைநேர் பாங்கி இறைவிக்கு அவன்குறை உணர்த்தல் முதலாகப் பாங்கி கையுறை புகழ்தல் ஈறாகச் சொல்லப்பட்ட ஆறும் பாங்கி மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தற்கும், தலைமகள் வலிதாகச் சொல்லி மறுத்தற்கும் உரிய கிளவியாம் என்றவாறு.

இறைவன் தனக்குக் குறைநேர் பாங்கி இறைவிக்கு அவன் குறை உணர்த்தற்குச் செய்யுள்:

1"இருவர்கண் டால்வரு மேதமென் றெண்ணி யெனக்கெதிரே
வருவர்வந் தாலுந்தம் வாய்திற வார்தஞ்சை வாணன்வெற்பி
னொருவர்நஞ் சார லுழையகலார் தழை யுள்ளதெல்லாந்
தருவர்வம் பார்முலை யாயென்கொ லோசெயத் தக்கதுவே"

எனவும்,

2"தன்குறையீ தென்னான் றழைகொணருந் தண்சிலம்ப
னின்குறை யென்னு நினைப்பினனாய்ப்--பொன்குறையு
நாள்வேங்கை நீழலு ணண்ணா னெவன்கொலோ
கோள்வேங்கை யன்னான் குறிப்பு"

எனவும் வரும்.

இறைவி அறியாள்போன்று குறியாள் கூறற்குச் செய்யுள்:

3"கலைதொடக் கீண்ட கருவியந் தேன்பல கால்கொடுமா
மலைதொடுத் தூர்ந்து வருகின்ற தாற்றஞ்சை வாணன்வென்றிச்
சிலைதொடுத் தாங்கெழில் சேர்நுத லாய்பயில் செம்பழுக்காய்க்
குலைதொடுத் தோங்குபைங் கேழ்ப்பூக நாகக் குழாங் கவர்ந்தே"



1. த. கோ. செ: 117.

2. திணைமாலை நூற். 31.

3. த. கோ. செ: 118.