1"நெய்யொடு மயக்கிய வுழுந்துநூற் றன்ன வயலையஞ் சிலம்பின் றலையது செயலையம் பகைத்தழை வாடு மன்னாய்" எனவும் வரும். இதனுட் பாங்கி கூற்றாயின வெல்லாம் குறைநயப்பித்தற்கும் தலைமகன் கூற்றாயின வெல்லாம் குறைமறுத்தற்கும் உரியவெனக் கொள்க. (31)
குறை நயப்பித்தலும் நயத்தலும் 148. 2தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தலும் மறுத்தற் கருமை மாட்டலும் தலைவன் குறிப்புவே றாகநெறிப்படக் கூறலும் தலைவியை முனிதலும் தலைவி பாங்கி தன்னை முனிதலும் தன்கைக் கையுறை ஏற்றலும் எனமுறை சாற்றிய ஆறும் வலிதாகச் சொல் லிக் குறைநயப் பித்தற்கும் மெலிதாகச் சொல்லி மேவற்கு முரிய.
1. ஐங்கு. செ.211.
2. முன் சூத்திரத்தில் குறைநயப்பித்தல் மறுத்தல் என்றும் இச் சூத்திரத்தில் குறை நயப்பித்தல் நயத்தல் என்றும் கூறிய நான்கையும் இரண்டாகக் கொள்க. அங்ஙனம் கொள்ளாவிடின், 144ஆம் சூத்திரத்தில் கூறிய இரந்துபின்னிற்றலும் சேட்படையுமாகிய இரண்டும் 145 ஆம் சூத்திரத்திற் கூறிய மடற்கூற்றும், மடல் விலக்குமாகிய இரண்டும், 146ஆம் சூத்திரத்திற் கூறிய குறைநேர்தலும், மடற்கூற்றொழிதலுமாகிய இரண்டும், 149 ஆம் சூத்திரத்திற் கூறிய கூட்டலும் கூடலும், ஆயங்கூட்டலும் வேட்டலுமாகிய நான்கும் இந் நான்கோடுங் கூடிப் பதினான்காம். ஆயினால், பாங்கியிற் கூட்டத்தின் வகையைக் கூறும் 143 ஆம் சூத்திரத்தில் 'ஈராறு வகைத்தே பாங்கியிற் கூட்டம்' என்றதனோடு மாறுகொள்ளும் என்றுணர்க. 'மறுத்தல்' என்பது 147 ஆம் சூத்திரத்தில் கூறப்பட்டிருப்பினும், முன்னர்க் கூறியவகைச் சூத்திரத்தில் கூறப்படாமையும் நோக்குக. அது நீங்கக் குறை நயப்பித்தல் இரண்டிடத்துக் கூறப்பட்டிருப்பினும் ஒன்றே யாதலை அறிக. தலைவி உள்ளத்துக்கண் மறுக்குங் கருத்தின்றி மறுக்கின்றாள் ஆதலின், ஈண்டு மறுத்தல் நயத்தலின்கண் அடங்கும் என்றறிக.
|