126


இறைவி கையுறையேற்றமை பாங்கி யிறைவற்குணர்த்தற்குச் செய்யுள்:

1"போயா னளித்தலுங் கைகுவித் தேற்றபின் போற்றியன்பாற்
சாரியாத கொங்கையின் மேலணைத் தாடஞ்சை வாணன்வெற்பா
காயா மலரன்ன மேனிமெய் யாகநின் கையுறையே
நீயாக வல்லது மாந்தழை யாக நினைந்திலளே"

எனவும்,

"தந்துநீ யளித்த தண்டழை காண்டலும்
வந்தன ளெதிர்ந்த மடந்தைதன் னெஞ்ச
மண்மிசை விளங்கி வழுத்தீர் மதியா
னுண்ணியற் பனுவ னுழைபொரு ணுனித்த
வாய்மொழி யமுத மடுக்குவண் மன்னே
யானிறை பெற்றது மிலளே"

எனவும் வரும்.

பாங்கி தலைமகற்குக் குறியிடங் கூறற்குச் செய்யுள்:

2"அணிமா மலர்மயி லைப்புயத் தூணங்கொ ளாகமென்னு
மணிமா ளிகைவைத்த வாணன்வண் காவலன் மாறைவெற்பா
துணிமா மரகதப் பாசறை வேலைச் சுடரவன்போற்
பணிமா மணிதிக ழும்பகல் யாங்கள் பயிலிடமே"

எனவும்,

3"கடும்புலால் புன்னை கடியுந் துறைவ
படும்புலாற் புட்கடிவான் புக்க - தடம்புலாந்
தாழைமா ஞாழற் றதைந்துயர்ந்த தாழ்பொழி
லேழைமா னோக்கி யிடம்"

எனவும் வரும்.

பாங்கி குறியிடத்து இறைவியைக் கொண்டுசேறற்குச் செய்யுள்:

4"நாமாவி மூழ்கி நறுமலர் குற்றுநந் தாவனத்துத்
தேமா விளந்தளிர் செவ்வண்ணங் கொய்து சிலம்பெதிர்கூய்
வாமா னெடுங்கண் மடந்தைநல் லாய்தஞ்சை வாணன்வெற்பிற்
பூமா தவிப்பந்தர் வாய்விளை யாடுதும் போதுகவே"

என வரும்.



1. த. கோ. செ: 129.

2. த. கோ. செ: 130.

3. திணைமாலை நூற். செ: 44.

4. த. கோ. செ: 131.