வடவர் தந்த வான்கேழ் வட்டங் குடபுல வுறுப்பிற் கூட்டுபு நிகழ்த்திய வண்டிமிர் நறுஞ்சாந் தணிகுவந் திண்டிமி லெல்லுத் தொழின்மடுத்த வல்வினைப் பரதவர் கூர்வளிக் கடுவிசை மண்டலிற் பாய்ந்துடன் கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை தண்கட லசைவளி யெறிதொறும் வினைவிட்டு முன்றிற் றாழை தூங்குந் தெண்கடற் பரப்பினெம் உறைவி னூர்க்கே" எனவும் வரும். தலைமகன் விருந்திறை விரும்பற்குச் செய்யுள்: 1"மஞ்சூட்டி யன்ன சுதைமதில் சூழ்தஞ்சை வாணன்வெற்பிற் பஞ்சூட் டியமென் பதயுகத் தீருங்கள் பாடியின்மான் வெஞ்சூட் டிழுதன்ன வூனும்பைந் தேனும் விருந்தினர்க்குச் செஞ்சூட் டிளகுபொன் போற்றினை மூரலுந் தெள்ளமுதே" என வரும். இதனுட் பாங்கி கூற்றாயின வெல்லாங் கூட்டற்கும், வேட்டற்கும் உரியன; தலைமகன் கூற்றாயினவெல்லாங் கூடற்கும், கூட்டற்கும் உரியவெனக் கொள்க. இம் மூன்று சூத்திரத்துள்ளும் எடுத்தோதப்பட்ட கிளவிகள், பாங்கி கூற்றுள், 2"நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும்" என்பதனாலும், தலைமகன் கூற்றுள், 3"வேளா ணெதிரும் விருந்தின் கண்ணும்" என்பதனாலுங் கொள்ளப்பட்டன. (33) பாங்கியிற் கூட்டத்து விரி இவை எனல் 150. அற்றமில் சிறப்பினிவ் வறுபத் தொன்றுங் குற்றமில் பாங்கியிற் கூட்டத்து விரியே. (இ - ம்.) பாங்கியிற் கூட்டத்து விரியெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தலைமகன் உட்கோள் சாற்றல் முதலாக விருந்திறை விரும்பல் ஈறாச் சொல்லப்பட்ட இவ்வறுபத்தொரு கிளவியும் பாங்கியிற் கூட்டத்து விரியாம் என்றவாறு. (34)
1. த. கோ. செ: 141. 2. தொல், பொருள், களவியல், சூ: 23. 3. தொல், பொருள், களவியல், சூ: 16.
|