132

முன்னிலைப் புறமொழி மொழிதலும் இன்னுயிர்ப்
பாங்கியொடு பகர்தலும் பாங்கியச் சுறுத்தலும்
நீங்கற் கருமை தலைவிநினைந் திரங்கலும்
தலைவிக் கவன்வரல் பாங்கி சாற்றலும்
சிறைப்புறமாகச் செறிப்பறி வுறுத்தலும்
முன்னிலைப் புறமொழி மொழிந்தறி வுறுத்தலும்
முன்னின் றுணர்த்தலும் முன்னின் றுணர்த்தி
ஓம்படை சாற்றலும் மேம்படு கிழவோன்
தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தலும்
என்றவீ் ரேழும் எல்லுக்குறி விரியே.

(இ - ம்.) ஒருசார் பகற்குறிவிரி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம்பொழுது கண்டு இரங்கல் முதலாகக் கிழவோன் தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல் ஈறாகச் சொல்லப்பட்ட பதினான்கும் ஒருசார்பகற்குறி விரியாம் என்றவாறு.

ஒருசாரென்றது அதிகாரத்தால் விரித்துரைக்கப்பட்டது. அவற்றுள்:

கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம்பொழுது கண்டு இரங்கற்குச் செய்யுள்:

1"ஆழ்ந்தார் தமக்கருளாதவர் போலிவ் வளவிலன்பு
சூழ்ந்தார் செலத்தொங்கல் சூழ்குழ லாய்சொற்பொருள் படைத்து
வாழ்ந்தார் புகழ்தஞ்சை வாணனைப் பேணலர் மானவெய்யோன்
வீழ்ந்தார் கலிக்கரந் தான்பனி மாலை வெளிப்படவே"

எனவும்,

2"நெய்தல் கூம்ப நிழல்குணக் கொழுகக்
கல்சேர் மண்டிலஞ் சிவந்துநிலந் தணியப்
பல்பூங் கானலு மல்கின் றன்றே
யினமணி யொலிப்பப் பொழுதுபடப் பூட்டி
மெய்ம்மலி காமத் தியாந்தொழு தொழியத்
தேருஞ் செல்புற மறையு மூரோ
டியாங்கா வதுகொ றானே தேம்பட



1. த. கோ. செ: 142.

2. நற்றிணை, செ: 187.