11. பகற்குறி இடையீடு பகற்குறி இடையீட்டின் வகை 155. விலக்கல் சேறல் கலக்க மென்றாங் சிகப்பின்மூ வகைத்தே பகற்குறி யிடையீடு. (இ - ம்.) பகற்குறி யிடையீடு தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) விலக்கலும், சேறலும், கலக்கமும் என மூன்று வகையினை உடைத்தாம் பகற்குறி யிடையீடு என்றவாறு. (39)
பகற்குறி இடையீட்டின் விரி 156. இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கலும் இறைவியைக் குறிவரல் விலக்கலும் இறைமகள் ஆடிட நோக்கி அழிதலும் பாங்கி ஆடிடம் விடுத்துக்கொண் டகறலும் பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடுசென் றிரங்கலும் வறுங்கள நாடி மறுகலும் குறுந்தொடி வாழுமூர் நோக்கி மதிமயங் கலுமெனும் ஏழும் பகற்குறி யிடையீட்டு விரியே. (இ - ம்.) பகற்குறியிடையீட்டு விரித்தொகை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல் முதலாகக் குறுந்தொடி வாழுமூர் நோக்கி மதிமயங்கல் ஈறாகச் சொல்லப்பட்ட ஏழும் பகற்குறி இடையீட்டின் விரியாம் என்றவாறு. இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கற்குச் செய்யுள்: 1"புனமும் பசுந்தினைச் செங்குர லேந்தும் புகன்றகிள்ளை யினமுங் குழீஇவந் திறைகொள்ளு மாலிறை யார்வளையும் மனமுங் கவர்வெற்ப வாணன்றென் மாறை மடப்பிடியு மனமுந் தொழுநடை பாற்பல கால்வரு மன்னையுமே" என வரும்.
1. த. கோ. செ: 156.
|