எய்திப் பாங்கி கையுறை காட்டலும் இற்கொண் டேகலும் பிற்சென் றிறைவனை வரவு விலக்கலும் பெருமகன் மயங்கலும் தோழி தலைமகள் துயர்கிளந்து விடுத்தலும் திருமகட் புணர்ந்தவன் சேறலும் என்றாங்கு இருபத் தேழும் இரவுக்குறி விரியே. (இ - ம்.) இரவுக்குறியின் விரி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இறையோன் இருட்குறி வேண்டல் முதலாகத் திருமகட் புணர்ந்தவன் சேறல் ஈறாகச் சொல்லப்பட்ட இருபத்தேழும் இரவுக்குறியின் விரி என்றவாறு. இறையோன் இருட்குறி வேண்டற்குச் செய்யுள்: 1"கருவிருந் தெண்டிசை யுங்கன மாமழை கான்றதுள்ளம் வெருவிருந் தெம்பதிக் கேகவொண்ணாது விதம்விதமாய் வருவிருந் தென்றும் புரந்தருள் வாணன்றென் மாறையன்னீர் ஒருவிருந் தெங்களைப் போலெய்து மோகங்கு லுங்களுக்கே" என வரும். பாங்கி நெறியின தருமை கூறற்குச் செய்யுள்: 2"மலைமாது வல்லவன் வாணன் வரோதயன் மாறைவெற்பிற் சிலைமா லுருமெங்குந் தீயுமி ழாநிற்குஞ் சிங்கமெங்கும் கொலைமா கரியிரை தேர்ந்துழ லாநிற்குங் கொற்றவபொற் கலைமா னுறைபதி நீவரு மாறென்கொல் கங்குலிலே." எனவும், 3"ஒருவரைபோ லெங்கும் பலவரையுஞ் சூழ்ந்த அருவரை யுள்ளதாஞ் சீறூர்-வருவரையுள் ஐவாய நாகம் புறமெல்லா மாயுங்காற் கைவாய நாகஞ்சேர் காடு." எனவும் வரும்.
1. த. கோ. செ: 163. 2. த. கோ. செ: 164. 3. திணைமாலை நூற். செ: 13.
|