147

பாங்கி தலைமகட்குத் தலைமகன் குறையறிவுறுத்தற்குச் செய்யுள்:

1"புயலே றதிர்தொறும் பொங்குளை மீதெழப் போதகந்தேர்ந்
தியலே றதிரு மிருங்கங்குல் வாய்முத்த மீன்றுசங்கம்
வயலே றணைவள ருந்தஞ்சை வாணன் வரையிலுண்கண்
கயலே றனையநின் பால்வரல் வேண்டினர் காதலரே."

எனவும்,

2"ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்
சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
தொன்முரண் சோருந் துன்னருஞ் சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்
வடுநா ணலமே தோழி நாமே."

எனவும் வரும்.

தலைமகள் நேராது நெஞ்சொடு கிளத்தற்குச் செய்யுள்:

3"விடவார் கணைவிழி மெல்லியன் மாதரை மேதினியோர்
மடவா ரெனுமுரை வாய்மைநெஞ்சே தஞ்சை வாணன்றெவ்விற்
கடவா ரணந்திரி கங்குனங் கண்ணன்ன காதலர்முட்
பிடவார் சிறுநெறி வாய்வரல் வேண்டினள் பெண்ணணங்கே."

என வரும்.

தலைமகள் நேர்ந்து பாங்கியொ டுரைத்தற்குச் செய்யுள்:

4"வெங்குல வாரண மேற்றவர்க் கேநல்கி வேற்றரசர்
தங்குல வாழ்வு தவிர்த்தருள் வாணன் றமிழ்ச்சிலம்பிற்
கங்குல வாவினர் காதலராயிற் களிபயந்த
கொங்குல வாவலர் சூழ்குழ லாயென்கொல் கூறுவதே."

எனவும்,

5"சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயி னிமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம்
உள்ளி னுண்ணோய் மல்கும்
புல்லின் மாய்வ தெவன்கொ லன்னாய்"

எனவும் வரும்.



1. த. கோ. செ: 169.

2. குறு. செ: 88.

3. த. கோ. செ: 170.

4. த. கோ. செ: 171.

5. குறு. செ: 150.