னேழி னெடுவரைப் பாழிச் சிலம்பிற் களிமயிற் கலாவத் தன்ன தோளே வல்வில் லிளையர் பெருமக னள்ளி சோலை யடுக்கத்துச் சுரும்புண விரிந்த கடவுட் காந்த ளுள்ளும் பலவுட னிறும்பூது கஞலிய வாய்மலர் நாறி வல்லினும் வல்லா ராயினுஞ் சென்றோர்க்குச் சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும் மாஅல் யானை யாஅய் கானத்துத் தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் வேயமைக் கண்ணிடை புரைஇச் சேய வாயினு நடுங்குதுயர் தருமே." எனவும் வரும். இவற்றுள், இறையோன் இருட்குறி வேண்டலும், நெறியினது எளிமை கூறலும், அவள் நாட்டணியியல் வினாதலும், பாங்கியிறைவிக்கு இறையோன் குறையறிவுறுத்தலுமாகிய நான்கும் வேண்டற்குரிய; பாங்கி நெறியினது அருமை கூறலும் இறைமகள் இறைவனைக் குறிவிலக்கலும், பாங்கி இறைவனை வரவு விலக்கலுமாகிய மூன்றும் மறுத்தற்குரிய; பாங்கி அவன் நாட்டணியியல் வினாதலும், அவர்க்குத் தன்னாட்டணியியல் சாற்றலும், தலைமகள் நேர்ந்து பாங்கியொடு சாற்றலுமாகிய மூன்றும் உடன்படற்குரிய; தலைமகள் நேர்ந்ததும், பாங்கி தலைமகற் குணர்த்தலும், குறியிடை நிறீஇத் தாய் துயில் அறிதலும், இறைவிக்கு இறைவன் வரவறிவுறுத்தலும், அவட்கொண்டு சேறலுமாகிய நான்கும் கூட்டற்குரிய; தலைமகளை யெதிர்ப்படுதலும், தேற்றலும், புணர்தலுமாகிய மூன்றும் கூடற்குரிய; தலைமகள் நலம்பாராட்டலும், கையுறை காட்டலுமாகிய இரண்டும் பாராட்டற்குரிய; தலைமகன் இறைவியை இல்வயின் விடுத்தலும், பாங்கி தலைமகளைக் கொண்டேகலுமாகிய இரண்டும் பாங்கி கூட்டற்குரிய; நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தலும், தலைமகள் ஆற்றினதருமை நினைந்திரங்கலும், பெருமகன் மயங்கலும், தோழி தலைமகள் துயர் கிளந்து விடுத்தலுமாகிய நான்கும் முயங்கற்குரிய; பாங்கிகுறியுய்த்தகறலும், திருமகட் புணர்ந்து அவன் சேறலுமாகிய இரண்டும் நீங்கற்குரியவாம் எனக் கொள்க. இவற்றுள் நேராதிறைவி நெஞ்சொடு கிளத்தலும், பெருமகள் ஆற்றின தருமை நினைந்திரங்கலும் இறைமகள் இறைவனைக் குறிவிலக்கலுமாகிய மூன்றும் வரைதல் வேட்கைக்குரிய; பாங்கி நெறியினதருமை கூறலும், இறைவனை வரவு விலக்கலும், தலைமகள் துயர் கிளந்து விடுத்தலுமாகிய மூன்றும் வரைவுகடாதற்குரியவாகும். (42)
|