155

13. இரவுக்குறி இடையீடு

இரவுக்குறி இடையீட்டின் வகை

159. அல்லகுறி வருந்தொழிற் கருமை யென்றாங்
கெல்லிக்குறி யிடையீ டிருவகைத் தாகும்.

(இ-ள்.) அல்லகுறியும், வருந்தொழிற் கருமையும் என இரண்டு வகையினை உடைத்து இரவுக்குறியிடையீடு என்றவாறு.

அல்லகுறி என்பது குறியல்ல என்றவாறு. அதனை முன்றில் என்பதுபோலக் கொள்க. அல்லகுறியாவது தலைமகனான் நிகழ்த்தப்படுவனவாகிய புள்ளெழுப்பல் முதலியன பிறிதொன்றினான் நிகழ்தல். வருந்தொழிற்கருமையாவது, தலைமகன் வருகின்ற தொழிற்கு அருமையாம். என்று என்பது எண்ணிடைச்சொல். ஆங்கு என்பது அசை.

(43)

அல்லகுறி

160. இறைவிக் கிகுளை யிறைவர வுணர்த்துழித்
தான்குறி மருண்டமை தலைவியவட் குணர்த்தலும்
பாங்கி தலைவன் றீங்கெடுத் தியம்பலும்
புலந்தவன் போதலும் புலர்ந்தபின் வறுங்களந்
தலைவிகண் டிரங்கலும் தன்றுணைக் குரைத்தலும்
தலைமக ளவலம் பாங்கி தணித்தலும்
இறைவன்மேற் பாங்கி குறிபிழைப் பேற்றலும்
இறைவிமேல் இறைவன் குறிபிழைப் பேற்றலும்
அவள்குறி மருண்டமை அவளவற் கியம்பலும்
அவன்மொழிக் கொடுமைசென் றவளவட் கியம்பலும்
என்பிழைப் பன்றென் றிறைவிநோ தலுமென
ஒன்றுபன் னொன்று மல் லகுறிக் குரிய.

(இ-ள்.) இறைவிக்கு இகுளையிறைவரவுணர்த்துழித்தான் குறிமருண்டமை தலைவி அவட்குணர்த்தல் முதலாக என் பிழைப்பன்று என்று இறைவி நோதல் ஈறாகச் சொல்லப்பட்ட பன்னிரண்டும் அல்லகுறிக்கு உரியவாகும் என்றவாறு.