இறைவிக்கு இகுளை இறைவரவுணர்த்தற்குச் செய்யுள்: 1"கயல்வென்ற வுண்கண்ணி காரண மேதுகொல் கைதையங்கா னயனின்ற புன்னையி னன்னமெல் லாமட லாழியங்கைச் சயமங்கை தன்பெரு மான்றஞ்சை வாணன் றரியலர்போற் றுயரம் பெருகி யிராவொரு போதுந் துயின்றிலவே." எனவும், "அம்ம வாழியோ வன்னைநம் படப்பைப் பொம்ம லோதி யம்மென் சாயன் மின்னென நுடங்கிடைக் கின்னிழ லாகிய புன்னை மென்காய் போகுசினை யிரிய வாடுவளி தூக்கிய வசைவிற் கொல்லோ தெண்ணீர்ப் பொய்கையில் வீழ்ந்தன வெண்ணினை யுரைமோ வுணர்குவல் யானே." எனவும் வரும். இது தோழி தாய்க்குரைப்பாள்போல் தலைமகட்கு உணர்த்தியவாறாம். தான்குறி மருண்டமை தலைவி பாங்கிக்குணர்த்தற்குச் செய்யுள்: 2"பேசத் தகுவதொன் றன்றுகண் டாய்பிறி தோர்குறியை நேசத் தவர்குறி யென்றுசென் றியான்குறி நின்றுவந்தேன் வாசத் தமிழ்புனை தோளுடை யான்றஞ்சை வாணனொன்னார் தேசத் தவருமெய் தாவெய்ய நோயெய்திச் சேயிழையே." எனவும், 3"அணிகடற் றண்சேர்ப்பன் றேர்ப்பரிமாப் பூண்ட மணியரவ மென்றெழுந்து போந்தேன்-கனிவிரும்பும் புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தே னொளியிழா யுள்ளுருகு நெஞ்சினே னாய்." எனவும் வரும். பாங்கி தலைமகன் தீங்கெடுத்தியம்பற்குச் செய்யுள்: 4"வடியோ வெனுங்கண் மடந்தைநல் லாய்தஞ்சை வாணனைவந் தடியோ மெனச்சென் றடையலர் போலயர் கின்றநின்கைத் தொடியோட மென்பணைத் தோளிணை வாடுந் தொழில்புரிந்த கொடியோர் துணிந்துசெய் தார்குறி யாத குறிநமக்கே." எனவும்.
1. த. கோ. செ: 190.
2. த. கோ. செ: 191. 3. ஐந்திணை ஐம்பது, செ: 50. 4. த. கோ. செ: 192.
|