1"போதார் கூந்த லியலணி யழுங்க வேதி லாட்டியை நீபிரிந் ததற்கே யழலவிர் மணிப்பூ ணனையப் பெயலா னாவென் கண்ணே தெய்யோ," எனவும் வரும். இவற்றுள், தன்பதிக்ககற்சி தலைவன் சாற்றலும், பாங்கி தலைவிக்கு அவன் செலவுணர்த்தலுமாகிய இரண்டும் செலவறி வுறுதற்குரிய; தலைமகனைப் பாங்கி விலக்கலாகிய ஒன்றும் செலவுடன் படாமைக்குரித்து; தலைவன் நீங்கல் வேண்டலாகிய ஒன்றும் செலவுடன் படுத்தற்குரித்து; தலைமகனைப் பாங்கி விடுத்தலாகிய ஒன்றும் செலவுடன்படுத்தற்குரித்து; தலைமகன் நெஞ்சொடு புலத்தலும், காமமிக்க கழிபடர் கிளவியுமாகிய இரண்டும் சென்றுழிக் கலங்கற்குரிய; தலைமகளைப் பாங்கி ஆற்றுவித்தலும், தலைமகன் வந்தமை தலைமகட் குணர்த்தலுமாகிய இரண்டும் தேற்றியாற்றுவித்தற்குரிய; பாங்கி வந்தோன்றன்னொடு நொந்து வினாதன் முதலாகிய மூன்றும் வந்துழி நொந்துரைத்தற்குரிய. (52)
17. வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவு வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிதலின் வகை 169. பிரிவறி வுறுத்தல் பிரிவுடன் படாமை பிரிவுடன் படுத்தல் பிரிவுடன் படுதல் பிரிவுழிக் கலங்கல் வன்புறை வன்பொறை வருவழிக் கலங்கல் வந்துழி மகிழ்ச்சியென் றொருமையிற் கூறிய ஒன்பது வகைத்தே வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவே. (இ - ம்.) வரைவிடைவைத்துப் பொருள் வயிற்பிரிவு ஆமாறுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பிரிவறிவுறுத்தல் முதலாக வந்துழி மகிழ்ச்சி ஈறாக ஒன்பது வகையினையுடைத்தாம். வரைவிடைவைத்துப் பொருள் வயிற்பிரிதல் என்றவாறு. (53)
1. ஐங்குறு. செ : 232.
|