வரைவின் இலக்கணம் 171. வரைவெனப் படுவ துரவோன் கிழத்தியைக் குரவர் முதலோர் கொடுப்பவும் கொடாமையும் கரணமொடு புணரக் கடியயர்ந்து கொளலே. இவ்வோத்தென்ன பெயர்த்தோ வெனின் வரைவியல் என்னும் பெயர்த்து. (இ - ள்.) வரைவு என்று சொல்லப்படுவது தலைமகன் தலைமகளைக் குரவர் முதலாயினோர் கொடுப்பவும் கொடாதொழியவும் வதுவைச் சடங்கொடு பொருந்த மணஞ்செய்து கோடல் என்றவாறு. (1) வரைவிற்குரிய கிளவித் தொகை 172. வரைவு மலிவே அறத்தொடு நிற்றலென்று உரையமை யிரண்டும் வரைவிற் குரிய கிளவித் தொகையெனக் கிளந்தனர் புலவர். (இ - ம்.) வரைவிற்குரிய கிளவித்தொகையுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வரைவு மலிவும் அறத்தொடு நிலையும் என்கின்ற இரண்டும் வரைவிற்குரிய கிளவியின்றொகை யென்று கூறினார் அறிவோர் என்றவாறு. (2)
1. வரைவுமலிதல் வரைவு மலிதலின் வகை 173. வரைவுமுயல் வுணர்த்தல் வரவெதிர் வுணர்த்தல் வரைவறிந்து மகிழ்தல் பராவல்கண் டுவத்தலென் றொருநால் வகைத்தே வரைவு மலிதல். (இ - ம்.) வரைவுமலிதலின் வகை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வரைவு முயல்வுணர்த்தல் முதலாகப் பராவல்கண்டுவத்தல் ஈறாக நான்கு வகையினையுடைத்தாம் வரைவுமலிதல் என்றவாறு. (3)
|