2

உத்தமன் புளிங்குடி உய்யவந் தானெனும்
முத்தமி ழாசான் மைந்தன் இத்தலத்
திருபெருங் கலைக்கும் ஒருபெருங் குரிசில்
பாற்கடற் பல்புகழ் பரப்பிய
நாற்கவி ராச நம்பியென் பவனே.

என்பது பாயிரம். பாயிரம் என்பது புறவுரை என்றவாறு. ஆயின், நூல் கேட்பான் புகுந்தே நூல் கேளாது புறவுரை கேட்டாற் பயன் என்னை யெனின்;

1"பருப் பொருட் டாகிய பாயிரங் கேட்டார்க்கு
நுண்பொருட் டாகிய நூலினிது விளங்கும்"

என்பவாகலாற் பாயிரங்கேட்டே நூல் கேட்க வேண்டும். அப் பாயிரம் பொதுப்பாயிரமும், சிறப்புப்பாயிரமும் என இரண்டு வகைப்படும். அவற்றுள், முன்னையது நூன்முகத்து உரைப்பினும் உரையா தொழியினும் அமையுமாதலிற் பொதுப்பாயிரம் என்றாயிற்று. பின்னையது நூன்முகத்து உரைக்க வேண்டுதலிற் சிறப்புப்பாயிரம் என்றாயிற்று.

அச் சிறப்புப்பாயிரம் எட்டு வகைப்படும்.

2"ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே"

என்றாராகலின்.

இனி இதனைக் காலமும், களனும், காரணமுங் கூட்டிப் பதினொன் றென்பாரும் உளர்.

என்னை?

3"காலங் களனே காரண மென்றிம்
மூவகை யேற்றி மொழிநரு முளரே"

என்றாராகலின்,


1, 2, 3. இம்மேற்கோட் சூத்திரங்கள் தொல். எழுத்துச் சிறப்புப் பாயிரம் நச்சினார்க்கினியர் உரையினும், இறையனார் அகப்பொருள் முதற் சூத்திர உரையினும் காட்டப்பட்டிருக்கின்றன. இவற்றுள் 2-ம் 3-ம் நன்னூலில் சிறப்புப்பாயிர இலக்கணங் கூறிய இடத்து ஆசிரிய வசனமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன.