மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தித் தேம்பலிச் செய்த வீர்நறுங் கையள் மலர்ந்த காந்த ணாறிக் கவிழ்ந்த கண்ணளெம் மணங்கி யோளே." எனவும் வரும். இவற்றுள், காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்குணர்த்தலும், தலைவி மணப்பொருட்டாக அணங்கைப் பராநிலை பாங்கி தலைமகற்குக் காட்டலுமாகிய இரண்டும் வரைவுமுயல்வுணர்த்தற்குரிய; பாங்கி தமர்வரைவெதிர்ந்தமை தலைமகட்குணர்த்தலாகிய ஒன்றும் வரைவெதிர் வுணர்த்தற்குரித்து; தலைவி நற்றாய் உள்ள மகிழ்ச்சியுள்ளலும், அவள் உவகையாற்றாது உளத்தொடு கிளத்தலும், தலைமகனைப் பாங்கி வாழ்த்தலுமாகிய மூன்றும் வரைவறிந்து மகிழ்தற்குரிய; தலைமகள் அணங்கைப் பராநிலைகண்டோன் மகிழ்தலாகிய ஒன்றும் பராவல்கண்டுவத்தற்குரித்து: (4)
2. அறத்தொடு நிலை அறத்தொடு நிலையின் வகை 175. முன்னிலை முன்னிலைப் புறமொழி யென்றாங் கன்ன விருவகைத் தறத்தொடு நிலையே. (இ - ம்.) அறத்தொடு நிலையின் வகை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) முன்னிலைமொழியு முன்னிலைப் புறமொழியுமென இருவகையினை யுடைத்தாம் அறத்தொடுநிலை என்றவாறு. மொழியென்பதனை முன்னும் பின்னும் கூட்டுக. (5)
தலைவி அறத்தொடு நிற்றல் 176. கையறு தோழி கண்ணீர் துடைத்துழிக் கலுழ்தற் காரணங் கூறலும் தலைவன் தெய்வங் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை எய்தக் கூறலும் இகந்தமை யியம்பலும் இயற்பழித் துரைத்துழி இயற்பட மொழிதலும் தெய்வம் பொறைகொளச் செல்குவ மென்றலும் இல்வயிற் செறித்தமை சொல்லலும் செவிலி கனையிருள் அவன்வரக் கண்டமை கூறலும்
|