எனமுறை யியம்பிய ஏழும் புனையிழைத் தலைவி அறத்தொடு நிலைதனக் குரிய. (இ - ம்.) தலைவி யறத்தொடு நிற்றற்குரிய கிளவிகளை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) கையறுதோழி கண்ணீர் துடைத்துழிக் கலுழ்தற் காரணங்கூறல் முதலாகச் செவிலி கனையிருள் அவன்வரக்கண்டமை கூறல் ஈறாகச் சொல்லப்பட்ட ஏழும் தலைமகள் அறத்தொடு நிற்றற்குரிய கிளவியாம் என்றவாறு. அவற்றுள், கையறுதோழி கண்ணீர் துடைத்தற்குச் செய்யுள்: 1"அயிரார் திரைவந்துன் வண்டலம் பாவை யழித்தனவோ செயிராத வன்னை செயிர்த்தன ளோசெறி நாரைதிண்போர் வயிரா நரலும் வயற்றஞ்சை வாணன்றென் மாறையிலென் உயிரா கியதைய னீகலுழ் வானென் னுளங்குழைந்தே." எனவும், 2"எழாஅ யாகலி னெழினலந் தொலைய வழாஅ தீமோ நொதுமலர் தலையே யேனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த பகழி யன்ன சேயரி மழைக்க ணல்ல பெருந்தோ ளோயே கொல்ல னெறிபொற் பிதிரிற் சிறுபல் காய வேங்கை வீயுகு மோங்குமலைக் கட்சி மயிலறி பறியா மன்னோ பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே." எனவும் வரும். தலைமகள் கலுழ்தற் காரணங்கூறற்குச் செய்யுள்: 3"தாரணி கொண்ட விருதோ ளொருவர் தனித்துழியென் வாரணி கொங்கை மணந்துசென் றார்தஞ்சை வாணனொன்னார் தேரணி வென்ற செழும்புகர் வேல்விழித் தேனினஞ்சூழ் காரணி மென்குழ லாயது வேகலுழ் காரணமே." எனவும்,
1. த. கோ. செ : 288.
2. நற்றிணை, செ : 13. 3. த. கோ. செ : 289.
|