206

செவிலி கனையிருள் அவன்வரக் கண்டமை கூறற்குச் செய்யுள்:

1"வெங்கார் முகவெம் புருவமின் னேயன்னை மேலொருநாள்
எங்கா தலரிரு ளெய்தல்கண் டாளிந்த வேழுலகும்
மங்காமல் வந்தருள் வாணன்றென் மாறைவண் டானமஞ்சச்
சங்காழி கொண்டெறி யுங்கண்டல் வேலியந் தண்டுறைக்கே."

எனவும்,

"நுழையுண் மடமகள் யார்கொலென் றென்னை
புழையு மடைத்தாள் கதவு."

எனவும் வரும்.

இவற்றுள், கலுழ்தற் காரணங் கூறலாகிய ஒன்றும் ஒழித்து ஏனையவெல்லாம் பாங்கி வினவாதொழியவும் தலைமகள்அறத்தொடு நிற்றற்கு உரியவாமாறு அறிந்துகொள்க.

(6)

பாங்கி அறத்தொடு நிற்றல

177. எறிவளை வேற்றுமைக் கேதுவி னாவினும்
வெறிவிலக் கியவழி வினாவினும் பாங்கி
பூவே புனலே களிறே யென்றிவை
யேது வாகத் தலைப்பா டியம்பும்.

(இ - ம்.) பாங்கி அறத்தொடு நிற்றற்குரிய கிளவிகளை யுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) செவிலி தலைமகள் வேற்றுமைக்குக் காரணங் கேட்பினும் தான் வெறிவிலக்கிய விடத்துக் காரணங்கேட்பினும் பாங்கி பூவும் புனலுங் களிறுமாகிய இவை காரணமாகப் புணர்ச்சியினை அறிவிக்கும் அவட்கு என்றவாறு.

அவற்றுள், செவிலி தலைமகள் வேற்றுமை கண்டு பாங்கியை வினாதற்குச்
செய்யுள்:

2"பொன்னுற்ற கொங்கையு முத்துற்ற கண்ணுமிப் போது கண்டேன்
பன்னுற்ற சொல்லுமின் பாலுங்கொள் ளாள்பதி னாலுலகும்
மன்னுற்ற வண்புகழ் வாணன்றென் மாறையென் மானனையாட்கு
என்னுற்ற தென்றறி யேன்புனங் காவ லிருந்தபின்னே."

என வரும்.



1. த. கோ. செ : 296.

2. த. கோ. செ : 297.