1"தந்தார்க்கே யாமாற் றடமென்றோ ளின்னநாள் வந்தார்க்கே யாமென்பார் வாய்காண்பாம் - வந்தார்க்கே காவா விளமணற் றண்கழிக் கானல்வாய்ப் பூவா விளஞாழற் போது." எனவும் வரும். இது நொதுமலர் வரைவின்கண் ணறத்தொடு நின்றதாம். புனல்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றற்குச் செய்யுள்: 2"ஒழிதோற் றியசொல்ல லுன்மக ளோதிக் குடைந்தகொண்டல் பொழிதோற் றிரளுந்தி வந்தசெந் நீருந்திப் பொற்பினுக்கோர் சுழிதோற் றிடும்பகை தீர்க்கின்ற போதொரு தோன்றலுமவ் வழிதோற்றி வந்தெடுத் தான்றஞ்சை வாணன்றென் வையையிலே." எனவும், 3"காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலான் நீணாக நறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினாற் பூணாக முறத்தழீஇப் போதந்தா னகனகலம் வருமுலை புணர்ந்தன வென்பதனா லென்றோழி யருமழை தரல்வேண்டிற் றருகிற்கும் பெருமையளே." எனவும் வரும். களிறுதரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றற்குச் செய்யுள்: 4"மண்ணலை யாமல் வளர்க்கின்ற வாணன்றென் மாறைவெற்பில் அண்ணலை யாயிழை பாகனென் றஞ்சின மஞ்சனந்தோய் கண்ணலை நீரிடப் பாகமு மேல்வந்த கைக்களிற்றின் புண்ணலை நீர்வலப் பாகமுந் தோயப் பொருதவன்றே." எனவும், 5"சுள்ளி சுனைநீலஞ் சோபா லிகைசெயலை யள்ளி யளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி யிதணாற் கடியொடுங்கா வீர்ங்கடா யானை யுதணாற் கடிந்தா னுளன்." எனவும் வரும். இம்மூன்றனுள் ஒன்றான் அறத்தொடு நிற்க அமையும் எனக் கொள்க. (7)
1. திணைமாலை நூ. செ : 39. 2. த. கோ. செ : 301. 3. கலி. குறிஞ்சி. செ : 3. 4. த. கோ. செ : 302. 5. திணைமாலை நூ. செ : 2.
|