செவிலி அறத்தொடு நிற்றல் 178. மின்னிடை வேற்றுமை கண்டுதாய் வினாவுழி முன்னிலை மொழியான் மொழியுஞ் செவிலி (இ - ம்.) செவிலி அறத்தொடு நிற்றற்குரிய கிளவிகளை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தலைமகள் வேறுபாடு கண்டு நற்றாய் செவிலியை வினாவியவிடத்து முன்னிலை மொழியானே சொல்லுஞ் செவிலி என்றவாறு. அவற்றுள், தலைமகள் வேற்றுமை கண்டு நற்றாய் செவிலியை வினாதற்குச் செய்யுள்: 1"தண்டார் தழுவிய வேலண்ணல் வாணன்றென் றஞ்சைவெற்பில் வண்டார்குழலிதன் வண்ணமுங் கண்ணும் வடிவுமுன்னாள் கண்டா ரறியும்படியன வேயல்ல காரணமொன் றுண்டா லுயிரனை யாயயி ராம லுரையெனக்கே." எனவும், 2"கண்ணுஞ் சேயரி பரந்தன்று நுதலு நுண்வியர் பொடித்து வண்டார்க் கும்மே வாங்கமை மென்றோண் மடந்தை யாங்கா யினள்கொ லென்னுமென் னெஞ்சே." எனவும் வரும். செவிலி நற்றாய்க்கு முன்னிலைமொழியான் அறத்தொடு நிற்றற்குச் செய்யுள்: 3"மலைவந்த தோவெனு வாரண வாணன்றென் மாறைமதிச் சிலைவந்த தோவெனு நன்னுத லாயொரு செல்வரிங்கோர் கலைவந்த தோவென வந்து வினாவி நங்காரிகைக்கு முலைவந்த தோவில்லை யோவென்னு நாளின் முயங்கினரே." என வரும். நற்றாய் குறிப்பின் அன்றி அறத்தொடு நிற்கப் பெறாள் என்றமையாற் செய்யுளில்லை. (8)
1. த. கோ. செ : 303. 2. தொல், பொருள், களவியல், 23-ஆம் சூ. உரை மேற்கோள் 3. த. கோ. செ : 304.
|