210

அறத்தொடு நிற்றலின் விரி இவை எனல்

179. என்றுடன் இயம்பிய எல்லாங் களவியல்
நின்றுழி அறத்தொடு நிற்றலின் விரியே.

(இ - ம்.) அறத்தொடு நிற்றலின் விரி இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) கையறு தோழி கண்ணீர் துடைத்துழித் தலைமகள் கலுழ்தற் காரணங் கூறல் முதலாகத் தலைமகள் வேறுபாடு கண்டு நற்றாய் வினாவியவழிச் செவிலி முன்னிலை மொழியான் மொழிதல் ஈறாகச் சொல்லப்பட்டன வெல்லாங் களவொழுக்கம் வெளிப்படாது நின்றவிடத்து அறத்தொடு நிற்றலின் விரியாம் என்றவாறு.

(9)

களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவித்தொகை

180. போக்கே கற்பொடு புணர்ந்த கவ்வை
மீட்சியென் றாங்கு விளம்பிய மூன்றும்
1வெளிப்படைக் கிளவியின் வழிப்படு தொகையே.

(இ - ம்.) களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவித்தொகை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) போக்கு முதலாக மீட்சி ஈறாகச் சொல்லப்பட்ட மூன்றும் களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவித்தொகை என்றவாறு.

(10)

3. உடன்போக்கு

உடன்போக்கின் வகை

181. போக்கறி வுறுத்தல் போக்குடன் படாமை
போக்குடன் படுத்தல் போக்குடன் படுதல்
போக்கல் விலக்கல் புகழ்தல் தேற்றலென்
றியாப்பமை உடன்போக் கிருநான்கு வகைத்தே.

(இ - ம்.) நிறுத்த முறையானே உடன்போக்கின் வகை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) போக்கறிவுறுத்தல் முதலாகத் தேற்றல் ஈறாக எட்டு வகையினையுடைத்தாம் அன்பமைந்த உடன்போக்கு என்றவாறு.

(11)


1.(பாடம்) வெளிப்படைக் கிளவி வெளிப்படு தொகையே.