தலைவன் போக்குடன்படுதலும், தலைவி யொருப்பட்டெழுதலும், பாங்கி சுரத்தியலுரைத்துழிச் சொல்லலுமாகிய மூன்றும் போக்குடன்படுதற்குரிய; பாங்கி கையடை கொடுத்தலும், வைகிருள் விடுத்தலும், தலைமகன் தலைமகளைச் சுரத்துய்த்தலுமாகிய மூன்றும் போக்கற்குரிய; தலைவன் தலைவி அசைவறிந்திருத்தலும், கண்டோர் காதலின் விலக்கலுமாகிய இரண்டும் விலக்கற்குரிய; தலைவன் தலைவியை உவந்தலர் சூட்டி உண்மகிழ்ந்துரைத்தலும், கண்டோர் அயிர்த்தலுமாகிய இரண்டும் புகழ்தற்குரிய; கண்டோர் தன்பதி அணிமை சாற்றலும் தலைவன் தன்பதி அடைந்தமை தலைவிக்குணர்த்தலுமாகிய இரண்டுந் தேற்றற்குரிய. (12) கற்பொடு புணர்ந்த கவ்வை கற்பொடு புணர்ந்த கவ்வையின் வகை
183. செவிலி புலம்பல் நற்றாய் புலம்பல் கவர்மனை மருட்சி கண்டோ ரிரக்கம் செவிலிபின் தேடிச் சேறலென் றாங்குக் கற்பொடு புணர்ந்த கௌவையை வகைத்தே. (இ - ம்.) கற்பொடு புணர்ந்த கௌவையின்வகை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) செவிலி புலம்பல் முதலாகச் செவிலி பின்தேடிச் சேறல் ஈறாக ஐந்துவகையினையுடைத்தாம் கற்பொடு புணர்ந்தகௌவை என்றவாறு. (13)
செவிலி புலம்பல் 184.வினவிய பாங்கியி னுணர்ந்த காலை இனைய லென்போர்க் கெதிரழிந்து மொழிதலும் தன்னறி வின்மை தன்னைநொந் துரைத்தலும் தெய்வம் வாழ்த்தலும் இவ்வொரு மூன்றும் இலங்கிழைச் செவிலி புலம்புதற் குரிய. (இ - ம்.) செவிலி புலம்பலின்விரி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வினவிய பாங்கியின் உணர்ந்தகாலை இனையலென்போர்க்கு எதிரழிந்துமொழிதல் முதலாகத் தெய்வம் வாழ்த்தல்
|