226

அனைமருட்சி

189. நிமித்தம் போற்றலும் சுரந்தணி வித்தலும்
தன்மகள் மென்மைத் தன்மைக் கிரங்கலும்
இளமைத் தன்மைக் குளமெலிந் திரங்கலும்
அச்சத் தன்மைக் கச்சமுற் றிரங்கலும்
எனவிவை ஐந்துமனை மருட்சிக் குரிய.

(இ - ம்.) அனைமருட்சியின்விரி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) நிமித்தம்போற்றல் முதலாக அச்சத்தன்மைக்கு அச்சமுற்றிரங்கல் ஈறாகச் சொல்லப்பட்ட ஐந்தும் அனைமருட்சிக்குரியவாம் என்றவாறு.

1அனை - நற்றாய். அவற்றுள், நிமித்தம் போற்றற்குச் செய்யுள்:

2"வடியேய் புகர்முக வாள்வல வாணன்றென் மாறையுள்யா
னடியே தொழுந்தெய்வ மாகநிற் பேணி யரும்பலியிப்
படியே தருகுவ லென்றுமின் னேயிப் பதியுவகைக்
கொடியே வரக்கரை நீகொடியேன்பெற்ற கொம்பினையே,"

எனவும்,

3"மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
யன்புடை மரபினின் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்திற் றருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளையொ
டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே."

எனவும் வரும்.


1. மற்றோர் பிரதியில் 'அனை எனினும் நற்றாய் எனினும் ஒக்கும்' என்ற பாடங் காணப்படுகின்றது. அ. கு. அவர்களும், த. க. அவர்களும் எழுதிய புத்துரையில் மனைமருட்சி எனக்கொண்டு, 'மனையின்கண் இருந்து நற்றாய் வருந்துதல்' என்று பொருள் கூறியிருக்கின்றார்கள், 'கற்பொடு புணர்ந்தகவ்வை'யின் வகையைக் கூறும் 'செவிலிபுலம்பல்' என்று தொடங்குஞ் சூத்திரத்தில் 'கவலனைமருட்சி' என்னாமல் 'கவன்மனை மருட்சி' என்று கூறி இருத்தலின் இவர்கள் கூறிய பொருளே ஏற்புடையதாம் என்று தோன்றுகின்றது. ஆய்ந்துகொள்க.

2. த. கோ. செ : 334.

3. ஐங்குறு. செ : 391.