234

(இ - ம்.) கற்பொடு புணர்ந்த கௌவையின்விரி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) செவிலி தேற்றுவார்க்கு எதிரழிந்து மொழிதல் முதலாகச் செவிலி புதல்வியைக் காணாது கவலைகூர்தல் ஈறாகச் சொன்ன இருபத்தொன்றும் கற்பொடுபுணர்ந்த கௌவையின் விரியாம் என்றவாறு.

(19)

5. மீட்சி

மீட்சியின் வகை

190. தெளித்தல் மகிழ்ச்சி வினாதல் செப்பலென
வெளிப்பட வுரைத்த மீட்சிநால் வகைத்தே.

(இ - ம்.) நிறுத்த முறையானே மீட்சியின்வகை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தெளித்தல் முதலாகச் செப்பல் ஈறாக நான்கு வகையினை யுடைத்தாம் மீட்சி என்றவாறு.

(20)

மீட்சியின் விரி

191. தலைவிசே ணகன்றமை செவிலிதாய்க் குணர்த்தலும்
தலைவன் றம்மூர் சார்ந்தமை சாற்றலும்
தலைவிமுன் செல்வோர் தம்மொடு தன்வரல்
பாங்கியர்க் குணர்த்தி விடுத்தலும் ஆங்கவர்
பாங்கியர்க் குணர்த்தலும் ஆங்கவர் கேட்டு
நற்றாய்க் குணர்த்தலும் நற்றாய் கேட்டவன்
உளங்கோள் வேலனை வினாதலும் எனவுடன்
விளம்பிரு மூன்று மீட்சியின் விரியே.

(இ - ம்.) மீட்சியின்விரி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தலைவி சேணகன்றமை செவிலி தாய்க்கு உணர்த்தல் முதலாக நற்றாய் கேட்டு அவன் உளங்கோள் வேலனை வினாதல் ஈறாகச் சொல்லப்பட்ட ஆறும் மீட்சியின் விரியாம் என்றவாறு.

அவற்றுள், தலைவி சேணகன்றமை செவிலி தாய்க்கு உணர்த்தற்குச் செய்யுள்: