1"வேறாக நின்னை வினவுவேன் றெய்வத்தாற் கூறாயோ கூறுங் குணத்தினனாய் - வேறாக என்மனைக் கேறக் கொணருமோ எல்வளையைத் தன்மனைக்கே யுய்க்குமோ தான்," எனவும் வரும். இவற்றுள், தலைவி சேணகன்றமை செவிலி தாய்க்குணர்த்தலும், தலைவன் தம்மூர் சார்ந்தமை சாற்றலுமாகிய இரண்டும் தெளித்தற்குரிய; தலைவி முன் செல்வோர் தம்மொடு தன்வரல் பாங்கியர்க்குணர்த்திவிடுத்தலும், பாங்கியர் நற்றாய்க்குணர்த்தலுமாகிய இரண்டும் மகிழ்ச்சிக்குரிய; நற்றாய் தலைமகன் உளங்கோள் வேலனை வினாதலாகிய ஒன்றும் வினாதற்குரித்து; முன் செல்வோர் பாங்கியர்க்கு உணர்த்தலாகிய ஒன்றுஞ் செப்பற்குரித்து. (21) உடன்போய் வரைந்து மீளுதற்கும், வரையாமல் மீண்டு அவள் மனையின் கண்ணாதல் தன் மனையின் கண்ணாதல் வரைதற்கும் உரிய கிளவிகள். 192. மடந்தையை யுடன்போய் வரைந்து மீடற்கும் அவள்மனை வரைதற்கும் தன்மனை வரைதற்கும் 2இவையைந்து முரிய செவிலிகூற் றொழித்தே. (இ - ம்.) 3செவிலியின் கூற்றொழித்து ஏனைய ஐந்து கூற்றின் பகுதி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மடந்தையை யுடன்போய் வரைந்து மீடற்கும், வரையாமல் மீண்டு அவள் மனையின்கண்ணேயாதல் தன்மனையின் கண்ணேயாதல் வரைந்து கோடற்கும் இலக்கணத் தினுரியவாம் செவிலி கூற்றாய ஒன்றையும் ஒழித்து அல்லாத ஐந்தும் என்றவாறு. (22)
1. திணைமாலை நூற். செ : 90 2. அ. கு. அவர்களும், த. க. அவர்களும் எழுதிய புத்துரையில், "இயைதலும் உரிய" என்று பாடம் கூறி விசேட உரையில் 'செவிலி கூற்றொழித்து இயைதலும் உரிய' என்றதனால் செவிலி கூற்றொழியாமல் ஆறும் இயைதலும் உரிய என்பதும் பெறப்படும்' என்பதை நோக்குக. 3. ஈண்டுச் செவிலி கூற்று என்றது, 91-ஆம் சூத்திரத்திற் கூறிய செவிலி கூற்றை.
|