தலைமகளைத் தலைமகன் விடுத்தற்குச் செய்யுள்: 1"ஆறலை வெஞ்சிலைக் கானவ ரேலென்கை யம்பொன்றினா னூறலை யஞ்சலெ னுண்ணிடை யாய்நும ரேலவர்முன் சேறலை யஞ்சுவல் செல்வல்பைம் பூகச் செழும்பழுக்காய்த் தாறலை தண்டலை சூழ்தஞ்சை வாணன் றமிழ்வெற்பிலே." எனவும், 2"வினையமை பாவையி னியலி நுந்தை மனைவரை யிறந்து வந்தனை யாயிற் றலைநாட் கெதிரிய தண்பெய லெழிலி யணிமிகு கானத் தன்புறப் பரந்த கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டு நீவிளை யாடுக சிறிதே யானே மழகளி றுரிஞ்சிய பராரை வேங்கை மணலிடு மருங்கி னிரும்புறம் பொருந்தி யமர்வரி னஞ்சேன் பெயர்க்குவெ னுமர்வரின் மறைகுவன் மாஅ யோளே." எனவும் வரும். தமருடன் செல்பவள் அவன்புறம் நோக்கிக் கவன்றாற்றற்குச் செய்யுள்: 3"ஏமா னெனவஞ்சு மெற்காத் தலினவ் விரவிபொற்றேர் வாமானின் வாழ்வன வாகபன் னாட்டஞ்சை வாணனொன்னார் போமா னதரிடத் தென்னையர் தோன்றப் புறங்கொடுத்த கோமான் மணிநெடுந் தேர்நுகம் பூண்ட குரகதமே." எனவும், 4"அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ வறனுண் டாயினு மறஞ்சா லியரோ வாள்வனப் புற்ற வருவிக் கோள்வ லென்னையை மறைத்த குன்றே." எனவும் வரும். இவற்றுள், முன்னைய மூன்றும் போக்கறிவுறுத்தற்குரிய; பின்னைய மூன்றும் வரவறிவுறுத்தல் முதலாகிய மூன்றற்குந் தனித்தனி உரிய எனக்கொள்க. மேற்கூறப்பட்ட கிளவிகள் இதற்கும் ஏற்பன அறிந்து கொள்க. (28)
1. த. கோ. செ : 364. 2. நற்றிணை, செ : 362. 3. த. கோ. செ : 365. 4. ஐங்குறு. செ : 312.
|