கற்பின் இலக்கணம் 200. பொற்பமை சிறப்பிற் கற்பெனப் படுவது மகிழ்வும் ஊடலும் ஊட லுணர்த்தலும் பிரிவும் பிறவும் மருவிய தாகும். இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், கற்புணர்த்தினமையிற் கற்பியல் என்னும் பெயர்த்து. (இ - ம்.) கற்பென்னுங் கைகோளது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பொலிவமைந்த சிறப்பினையுடைய கற்பென்று சொல்லப்படுவது உள்ள மகிழ்ச்சியும் ஊடலும் ஊடலுணர்த்தலும் பிரிவும் பொருந்தியதாம் என்றவாறு. பிற என்றதனாற் பிரிந்துழி வரும் விகற்பம் எல்லாம் கொள்ளப்படும். (1) கற்பிற்குரிய கிளவித் தொகை 201. இல்வாழ்க் கையே பரத்தையிற் பிரிவே ஓதற் பிரிவே காவற் பிரிவே தூதிற் பிரிவே துணைவயிற் பிரிவே பொருள்வயிற் பிரிவெனப் பொருந்திய ஏழும் வளமலி கற்பின் கிளவித் தொகையே. (இ - ம்.) கற்பினது கிளவித்தொகை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இல்வாழ்க்கை முதலாகப் பொருள்வயிற்பிரிதல் ஈறாகச் சொல்லப்பட்ட ஏழும் கற்பின் கிளவித்தொகை என்றவாறு. (2) 1. இல்வாழ்க்கை இல்வாழ்க்கையின் வகை 202. கிழவோன்மகிழ்ச்சி கிழத்தி மகிழ்ச்சி பாங்கி மகிழ்ச்சி செவிலி மகிழ்ச்சியென் றீங்கு நால்வகைத் தில்வாழ்க் கையே.
|