வேந்துவிடு தொழிலொடு செலினுஞ் சேந்துவர லறியாது செம்மல் தேரே." எனவும் வரும். இவற்றுள், தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தலாகிய ஒன்றும், கிழவோன் மகிழ்ச்சிக்குரித்து; தலைவனைப் பாங்கி வாழ்த்தல் முதலாகச் செவிலிக்கு வாழ்க்கை நன்றென்றறைதல் ஈறாகச் சொல்லப்பட்ட ஆறனுள், பெருமகள் உரைத்தலாகிய ஒன்றுங் கிழத்தி மகிழ்ச்சிக்குரித்து; அல்லாத ஐந்தும் பாங்கி மகிழ்ச்சிக்குரிய; செவிலி நற்றாய்க்குத் தலைமகள் கற்பியல் உணர்த்தல் முதலாகிய மூன்றுஞ் செவிலி மகிழ்ச்சிக்குரிய எனக்கொள்க. (4) 2. பரத்தையிற் பிரிவு பரத்தையிற்பிரிவின் வகை 204. வாயில் வேண்டல் வாயில் மறுத்தல் வாயினேர் வித்தல் வாயி னேர்தலென் றாய பரத்தையின் அகற்சிநால் வகைத்தே. (இ - ம்.) பரத்தையிற்பிரிவின்வகை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வாயில்வேண்டல் முதலாக வாயினேர்தல் ஈறாக நான்கு வகையினை யுடைத்தாம் பரத்தையிற்பிரிவு என்றவாறு. (5) உணர்த்த உணரும் ஊடற்குரிய கிளவிகள் 205. காதலன் பிரிவுழிக் கண்டோன் புலவிக் கேதுவீ தாமிவ் விறைவிக் கென்றலும் தனித்துழி இறைவி துனித்தழு திரங்கலும் ஈங்கிது என்னெனப் பாங்கி வினாதலும் இறைமகன் புறத்தொழுக் கிறைமக ளுணர்த்தலும் தலைவியைப் பாங்கி கழறலும் தலைவி செவ்வணி யணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி யுழையர்கண் டழுங்கிக் கூறலும் பரத்தையர் கண்டு பழித்தலும் பரத்தையர் உலகிய னோக்கி விடுத்தலிற் றலைவன்
|