252

வரவுகண் டுவந்து வாயில்கள் மொழிதலும்
வரவுணர் பாங்கி அரிவைக் குணர்த்தலும்
முதிரா மென்முலை யெதிர்கொண்டு பணிதலும்
புணர்ச்சியின் மகிழ்வுமென் றுரைத்த பன்னொன்றும்
உணர்த்த உணரும் ஊடற் குரிய.

(இ - ம்.) பரத்தையிற்பிரிவில் உணர்த்தவுணரும் ஊடற்குரிய விரி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு ஏது ஈதாம் இவ்விறைவிக்கென்றல் முதலாகப் புணர்ச்சியின் மகிழ்தல் ஈறாகச் சொல்லப்பட்ட பதினொன்றும் உணர்த்தவுணரும் ஊடற்குரியவாம் என்றவாறு.

அவற்றுள், காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு ஏது ஈதாம் இவ்விறைவிக்கென்றற்குச் செய்யுள் :

1"மாறையர் காவலன் வாணன்றென் றஞ்சையில் வாணுதற்கிவ்
வாறயர் காரண மாகுமென் றேகொங்கை யானையுடன்
சாறையர் வீதிய ரிப்பறை யார்ப்பத் தயங்குகுழல்
சூறையர் சூறைகொள் வான்வய லூரனைச் சூழ்ந்தனரே."

என வரும்.

தனித்துழி இறைவி துனித்தழுது இரங்கற்குச் செய்யுள் :

2"வன்போ தணிதொங்கல் வாணன்றென் மாறை மகிழ்நர்நம்மேல்
அன்போடு நன்னெஞ் சறிவறை போக வழலுள்வெந்த
பொன்போ னிறங்கொண் டிரவுங்கண் ணீரும் புலர்வதுபார்த்
தென்போ லெவரிங்ங னேயிமை யாம லிருப்பவரே."

எனவும்,

3"சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலக்கிப்
பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந்
தூதை தூற்றுங் கூதிர் யாமத்
தானுளம் புலம்புதொ றுளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே."

எனவும் வரும்.


1. த. கோ. செ : 377.

2. த. கோ. செ : 378.

3. குறுந். செ : 86.