மொய்க்குஞ் சுடரிள வம்புலி தானு முயங்கியெல்லாத் திக்குந் தொழவரு மேசுரு ளோலைத் திருமுகமே." எனவும், 1"முல்லை நாறுங் கூந்தல் கமழ்கொள நல்ல காண்குவ மாஅ யோயே பாசறை யருந்தொழி லுதவிநங் காதனன் னாட்டுப் போதரும் பொழுதே." எனவும் வரும். பாசறைமுற்றி மீண்டு ஊர்வயின் வந்த தலைமகன் பாகற்குச் சொல்லியதற்குச் செய்யுள்: 2"மால்கொண்ட வாரண வாணன்றென் மாறை வலவநண்ணார் கால்கொண்ட வாளமர் கையகல் பாசறைக் கைவயின்முட் கோல்கொண்ட வாறுநின் னேவல்கொண் டியானிக் கொடி நெடுந்தேர் மேல்கொண்ட வாறுநம் மூர்வந்த வாறும் வியப்பெனக்கே." எனவும் வரும். தலைமகளோடிருந்த தலைமகன் கார்ப்பருவங்கண்டு உவந்து சொல்லியதற்குச் செய்யுள்: 3"கொத்தல ரோதியங் கொம்பரன் னாள்பொங்கு கொங்கை விம்ம முத்தல ராக முயங்கினம் யாமுழு நீர்விழிபோல் மைத்தலர் நீல மலர்வயல் சூழ்தஞ்சை வாணன்வண்மைக் கைத்தல மான வினிப்பொழி வாழிய கார்முகிலே." எனவும், 4"தாழிரு டுமிய மின்னித் தண்ணென வீழுறை யினிய சிதறி யூழிற் கடிப்பிகு முரசின் முழங்கி யிடித்திடித்துப் பெய்தினி வாழியோ பெருவான் யாமே செய்வினை முடித்த செம்ம லுள்ளமோ டிவளின் மேவின மாகிக் குவளைக் குறுந்தா ணாண்மலர் நாறும் நறுமென் கூந்தன் மெல்லணை யேமே." (10) எனவும் வரும். நான்காவது கற்பியல் முற்றிற்று.
1. ஐங்குறு. செ : 446.
2. த. கோ. செ : 424. 3. த. கோ. செ : 425. 4. குறு. செ : 270.
|