272

3. கூற்று

களவிற் கூற்றிற் குரியார்

213. தலைவன் தலைவி பார்ப்பான் பாங்கன்
பாங்கி செவிலியென் றீங்கிவ் வறுவருஞ்
சாற்றிய களவிற் கூற்றிற் குரியர்.

(இ - ம்.) களவுக் கைகோளகத்துக் கூற்றிற்கு உரியோரை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தலைவன் முதலாகச் சொல்லப்பட்ட அறுவரும் மேற்சொல்லப்பட்ட களவினகத்திற் கூற்றிற்கு உரியவராவர் என்றவாறு.

(4)

கற்பின் கூற்றிற் குரியார்

214. நற்றாய் கண்டோர் பாணன் கூத்தர்
விறலி பரத்தை அறிவரென் றெழுவரும்
1அறுவரென் றவரும் ஆகிய அனைவரும்
குறைவறு கற்பிற் கூற்றிற் குரியர்.

(இ - ம்.) கற்பிற் கூற்றிற்கு உரியோரை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) நற்றாய் முதலாகிய எழுவரும் மேற்சொல்லப்பட்ட தலைவன் முதலாகிய அறுவருமாகிய பதின்மூவரும் குற்றம் அற்ற கற்பினகத்துக் கூற்றிற்கு உரியராவர் என்றவாறு.

(5)

கூற்றிற் குரிமை இல்லாதார்

215. 2பயந்தோன் றன்னை உயங்குநோ யறிவோர்
3ஊரவர் அயலோர் சேரியோர் என்றிவர்
4முகத்துரை நிகழா அகப்பொரு ளகத்தே.

(இ - ம்.) இதுவும் அகப்பொருளகத்து முகத்துரை நிகழாதோரை உணர்த்துதல் நுதலிற்று.


1. (பாடம்)'அறுவகை யவரும்'

2. இது களவுகற்பு என்னும் இரண்டினுக்கும் பொது.

3. (பாடம்) உரவர், அறிஞர்.

4. முகம் - வாய்.