275


நற்றாய் கூற்று நிகழும் இடம்

219. புணர்ந்துடன் போய துணர்ந்த பின்னர்
அந்தணர் தெய்வம் அயலோர் அறிவர்
சிந்தைநோ யறிவோர் செவிலி பாங்கியொடு
கண்டோர்க் குரைக்கும் பண்புடை நற்றாய்.

(இ - ம்.) நற்றாய் கூற்றுக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) அந்தணர் முதலாகச் சொல்லப்பட்ட அனைவரோடும் நற்றாய் கூறும், தலைமகள் புணர்ந்துடன் போனவாறுதான் அறிந்தபின் என்றவாறு.

(10)

செவிலி கூற்று நிகழும் இடம்

220. தாயொடும் பாங்கி தான்முத லாரொடுஞ்
சேயிழை செவிலியுஞ் செப்பு மாங்கே.

(இ - ம்.) செவிலி கூற்றுக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)நற்றாயோடும் பாங்கி முதலானாரோடும் தலைமகள் செவிலித்தாயும் சொல்லும், அவள் புணர்ந்துடன் போன தன்மைதான் அறிந்தபின் என்றவாறு.

இவ்விருவர் கூற்றிற்கும் உதாரணம் உடன்போக்கினுட் காட்டப்பட்டன.

(11)


கண்டோர் கூற்று நிகழும் இடம்

221. தாயர் பாங்கியர் தலைவன் தலைவியோ
டேயும் என்ப கண்டோர் கூற்றே.

(இ - ம்.) கண்டோர் கூற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தாயர் முதலானவரோடு நிகழுங் கண்டோர் கூற்று என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

உதாரணம் உடன்போக்கினுள்ளும் கற்பினுள்ளும் கண்டுகொள்க.

(12)