278

(இ - ம்.) நிறுத்தமுறையானே கேட்போர் என்னும் உறுப்பைக் கூறுவான் றொடங்கித் தலைவன் கூற்றும், தலைவி கூற்றும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தலைவன் கூற்றும் தலைவி கூற்றும் பார்ப்பான் முதலாகிய பதின்மரும் கேட்பர் என்றவாறு.

தலைவன் தலைவியோடு நற்றாய் கூறாள் எனவே நற்றாயோடு அவ்விருவரும் கூறார் என்பது போதருதலான் மறையோன் முதலிய பதினொருவருள் நற்றாயை ஒழித்துப் பதின்மர் என்றாரென்க.

(16)

மறையோன் கூற்றும் அறிஞர் கூற்றும் கேட்போர்

226. மறையோன் கூற்றும் அறிவர் கூற்றும்
இறையோன் முதலா எனைவரும் கேட்ப.

(இ - ம்.) மறையோன் கூற்றும் அறிவர் கூற்றும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) பார்ப்பானும் அறிவருமாகிய இருவர் கூற்றும் தலைமகன் முதலாகிய எல்லாரும் கேட்பர் என்றவாறு.

இவ்விரண்டு சூத்திரத்தானுஞ் சொல்லியது கேட்போர் இவர் எனக்கொள்க.

(17)

5. இடம்

இடம் இன்னது என்பது

227. நெறிப்படு கருமம் நிகழ்வுழி யிடமே.

(இ - ம்.) நிறுத்த முறையானே இடம் என்னும் உறுப்பு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) முறைபட்ட காரியம் நிகழும் நிலம், இடம் என்னும் உறுப்பாம் என்றவாறு.

அன்றித் தன்மை, முன்னிலை, படர்க்கை எனினுமமையும், நெறிப்பட்ட கருமமாவன களவும் கற்பும் என்பனவாம்.

(18)

6. காலம்

காலம் இன்னது என்பது

228. சென்றதும் நிகழ்வதும் எதிர்வதும் எனமுறை
நின்று பொருளுணர நிகழ்வது காலம்.


1. ஈண்டு 'கேட்போர் இவர் என்பது' என்றிருப்பின் நன்றாம்.