(இ - ம்.) நிறுத்த முறையானே காலம் என்னும் உறுப்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இறந்தகாலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் என, அடைவே நின்று உலகத்துள்ள பொருள்களை அறியும்படியாக நடப்பது காலம் என்னும் உறுப்பாம் என்றவாறு. (19)
7. பயன் பயன் இன்னது என்பது 229. இப்பொருள் பயக்குமிஃ தென்பது பயனே. (இ - ம்.) நிறுத்த முறையானே பயன் என்னும் உறுப்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இப்பொருளை இது பயக்கும் என்று சொல்லுவது பயன் என்னும் உறுப்பாம் என்றவாறு. (20)
8. முன்னம் முன்னம் இன்னது என்பது 230. இன்னார்க் கின்னுழி இன்னது பயக்குமெனும் முன்னம் தருவது முன்ன மாகும். (இ - ம்.) நிறுத்த முறையானே முன்னம் என்னும் உறுப்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இத்தன்மையர்க்கு இவ்விடத்து இன்னது தரும் என்னும் குறிப்பினை வெளிப்படுப்பது முன்னம் என்னும் உறுப்பாம் என்றவாறு. (21) 9. மெய்ப்பாடு மெய்ப்பாடு இன்னது என்பது 231. நகை முதலாமிரு நான்குமெய்ப் பாடும் நிகழ்பொருள் மெய்ப்பட நிற்பமெய்ப் பாடே. (இ - ம்.) நிறுத்த முறையானே மெய்ப்பாடு என்னும் உறுப்பு உணர்த்துதல் நுதலிற்று.
|