280

(இ - ள்.) நகையும், அழுகையும், இளிவரலும், மருட்கையும், அச்சமும், பெருமிதமும், உவகையும், வெகுளியும் என்னும் எட்டு வகை மெய்ப்பாடும், அவ்விடத்து நிகழும் பொருளைக்கேட்டோர் மெய்யின்கண்ணே வெளிப்பட நிற்பன மெய்ப்பாடு என்னும் உறுப்பாம் என்றவாறு.

மெய்ப்பாடு 'வெளிப்பாடு' எனக்கொள்க.

(22)

10. எச்சம்

எச்சம் இன்னது என்பது

232. சொல்லே யாயினும் குறிப்பே யாயினும்
சொல்லி முடித்தல் வேண்டுவ தெச்சம்.

(இ - ம்.) நிறுத்த முறையானே எச்சமென்னும் உறுப்பு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஒரு சொல்லேயாயினும் ஒரு குறிப்பேயாயினும் கூட்டிப் பொருள் முடித்தல் வேண்டி நிற்பது எச்சம் என்னும் உறுப்பாம் என்றவாறு.

(23)

11. பொருள் வகை

பொருள் வகை இன்னது என்பது

233. ஒருதிணைக் குரிமை பூணா நிலைமை
பொருள்வகை யென்மனார் புலமை யோரே.

(இ - ம்.) நிறுத்த முறையானே பொருள்வகை என்னும் உறுப்பு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) இத்திணைக்கே இப்பொருள் உரித்தாவது என்னாமல் எல்லாத் திணைக்கும் பொதுவாய் நிற்கும் நிலைமை பொருள்வகை என்று சொல்லுவர் அறிவுடையோர் என்றவாறு.

அவையாவன: நிரனிறை மொழிமாற்று, சுண்ணமொழி மாற்று, அடிமறி மொழிமாற்று, அடிமொழி மாற்று, பூட்டுவிற் பொருள்கோள், புனல்யாற்றுப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், அளைமறியாப்புப் பொருள்கோள், கொண்டு கூட்டுப் பொருள்கோள் 1என ஒன்பதாம்.

(24)


1. என்னும் ஒன்பதாம் என்றிருப்பின் நலமாம்.