283


எச்சத்திற்குப் புறனடை

235. அவற்றுள்,
எச்சம் இன்றியும் இயையு மென்ப.

(இ - ம்.) எச்சவுறுப்புக்காவதொரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்கொள்ளப்பட்ட திணை முதலாகிய பன்னிரண்டனுள்ளும் எச்சம் என்னும் உறுப்பு ஒழிந்து தொடரவும் பெறும் அகப்பாட்டென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

அதற்குச் செய்யுள்:

1"சேலார் புனல்வையை சூழ்தஞ்சை வாணன்றென் மாறையினம்
வேலா னெனப்பிறர் வேட்டவர் யார்மணம் வெண்டுகிலின்
பாலா ரமளியும் பாற்கட லானது பங்கயக்கண்
மாலா யினனிவ னுந்திரு வாயினள் மாதுமின்றே."

இதற்குத் திணை - முல்லை; கைகோள் - கற்பு; கூற்று - கண்டோர் கூற்று; கேட்போர் - தம்மிற்றாம்; இடம் - வதுவை மனையிடம்; காலம் - நிகழ்காலம்; பயன் - காட்சி; முன்னம் - இவ்விடத்து இவர்க்கிது தகும் என்பது; மெய்ப்பாடு - உவகை; எச்சம் - இல்லை; பொருள்கோள் - புனல்யாற்றுப் பொருள்கோள், பிறவுமன்ன.

(26)

அகப்பாட்டினுள் வரும் பொருள்கள்

236. உவமப் பொருளும் இறைச்சிப் பொருளுமென்
றிருவகைப் பொருளும் எய்துமகப் பாட்டினுள்.

(இ - ம்.) அகப்பாட்டுள் வரும்பொருள்கள் இவையென்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) உவமைப்பொருளும் இறைச்சிப் பொருளும் என்று கூறப்பட்ட இரண்டுவகைப் பொருளும் வரும் அகப்பாட்டிடத்து என்றவாறு.

(27)

உவம வகை

237. உள்ளுறை உவமம் வெளிப்படை யுவமமென
எள்ளரும் உவமம் இருவகை யுடைத்தே.

(இ - ம்.) உவம வகை உணர்த்துதல் நுதலிற்று.


1. த. கோ. செ : 366.