284

(இ - ள்.) உள்ளுறை யுவமமும், வெளிப்படை யுவமமும் என இரண்டு கூற்றினை உடைத்தாம் அகப்பாட்டினுட் கிடக்கும் உவமப்பொருள் என்றவாறு.

(28)

உள்ளுறை உவமத்தின் இலக்கணம்

238. அவற்றுள்,
உள்ளுறை யுவமம் உய்த்துணர் வகைத்தாய்ப்
புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும்.

(இ - ம்.) உள்ளுறை உவமம் இவ்வியல்பிற்று என்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட இரண்டுவமத்துள்ளும் உள்ளுறையுவமமாவது, ஆராய்ந்தறியும் பகுதியினை யுடைத்தாய்ப் புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் தோன்றும் என்றவாறு.

உதாரணம் :

1"இழைவிளை யாடு மிளமுலை சாயற் கிடைந்தமஞ்ஞை
கழைவிளை யாடுங் கடிப்புனங் காத்துங் கலையகலா
துழைவிளை யாடு முயர்சிலம் பாவின்னு முன்பொருட்டால்
மழைவிளை யாடு மதிற்றஞ்சை வாணன் மலயத்திலே."

இதனுள் மானைப் பிரியாது கலைவிளையாடும் எனவே அதுபோல நீயும் தலைவியைப் பிரியாது விளையாடுக என உள்ளுறையுவமம் விலங்கொடு தோன்றியவாறு காண்க. பிறவுமன்ன.

(29)

வெளிப்படை உவமத்தின் இலக்கணம்

239. வெளிப்படை உவமம் வினைபயன் மெய்யுரு
வெளிப்பட நின்று விளங்குவ தாகும்.

(இ - ம்.) வெளிப்படை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) வெளிப்படை உவமமாவது தொழிலும் பயனும், வடிவும் நிறனும் புலப்படுமாறு நின்று விளங்குவதாம் என்றவாறு.

(30)


இறைச்சிப் பொருளின் இலக்கணம்

240. கருப்பொருட் பிறக்கும் இறைச்சிப் பொருளே.


1. த. கோ. செ : 238.