(இ - ம்.) இறைச்சிப்பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இறைச்சிப் பொருளாவது தெய்வ முதலாகிய பொருளின்கண்ணே பிறக்கும் என்றவாறு. (31)
அகப்புறக் கைக்கிளை 241. காமஞ் சாலா இளமை யோள்வயிற் குறிப்பறி வுறாது குறுகியாங் கவளோ டிறப்பக் கூறுவ தகப்புறக் கைக்கிளை. (இ - ம்.) வழுவமைதி கூறுவான் தொடங்கி முதற்கண் அகப்புறக் கைக்கிளை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) காமஞ்சாலா இளமைத் தன்மையினையுடைய தலைமகள் பக்கத்துத் தலைமகன் குறிப்பறியாது சென்று சார்ந்து அவளொடு மேன்மேலும் கூறுவது அகப்புறக் கைக்கிளையாம் என்றவாறு. அன்னதாதல், "ஊர்க்கா னிவந்த பொதும்பருள்" என்னும் குறிஞ்சிக்கலி, 20ஆம் செய்யுளுள்ளும், பிறவற்றுள்ளுங் கண்டு கொள்க. (32) அகப்புறக் கைக்கிளைக்குரியவர் 242. அதுவே, இறைமையில் லோர்க்கும் இழிகுலத் தோர்க்கும் முறைமையின் உரித்தே முன்னுங் காலை. (இ - ம்.) அகப்புறக் கைக்கிளைக்கு உரியாரை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்சொல்லப்பட்ட கைக்கிளைதான் தலைமைப்பாடில்லாதார்க்கும் இழிந்த குலத்தார்க்கும் முறையான் உரித்தாம் ஆராயுங்காலத்து என்றவாறு. முறைமை என்பது மேற்சொல்லிய முறைமை முன்னுங்காலை என்றதனால் இது பயின்று வாராது எனக்கொள்க. "ஏ ஏ யிஃதொத்தன்" என்னும்குறிஞ்சிக்கலி, 26ஆம் செய்யுளுள்ளும், "என்னோற் றனைகொல்லோ"என்னும் மருதக்கலி, 29ஆம் செய்யுளுள்ளும் கண்டுகொள்க. (33)
|