அகப்பொருட் பெருந்திணை 243. அகன்றுழிக் கலங்கலும் புகன்றமடற் கூற்றும் குறியிடை யீடும் தெளிவிடை விலங்கலும் வெறிகோள் வகையும் விழைந்துடன் போக்கும் பூப்பிய லுரைத்தலும் பொய்ச்சூ ளுரையும் தீர்ப்பில் ஊடலும் போக்கழுங் கியல்பும் பாசறைப் புலம்பலும் பருவமாறு படுதலும் வன்புறை யெதிர்ந்து மொழிதலும் அன்புறு மனைவியும் தானும் வனமடைந்து நோற்றலும் பிறவும் அகப்பொருட் பெருந்திணைக் குரிய. (இ - ம்.) அகப்பொருட் பெருந்திணைக்குரியவை இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அகன்றுழிக் கலங்கல் முதலாகத் தலைவியும் தானும் வனமடைந்து நோற்றல் ஈறாகச் சொல்லப்பட்டனவும், பிறவும் அகப்பொருட் பெருந்திணைக்குரியவாம் என்றவாறு. (34) அகப்புறப் பெருந்திணை 244. 1மடலே றுதலொடு விடைதழால் என்றா குற்றிசை தன்னொடு குறுங்கலி யென்றா சுரநடை தன்னொடு முதுபாலை யென்றா தாபத நிலையொடு தபுதார நிலையெனப் புகன்றவை இயற்பெயர் பொருந்தா வாயின் அகன்ற வகப்புறப் பெருந்திணைக் காகும். (இ - ம்.) அகப்புறப் பெருந்திணை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மடலேறல் முதலாகத் தபுதாரநிலை ஈறாகச் சொல்லப்பட்டன இயற்பெயர் கூடாவாயின் அகப்புறப் பெருந்திணைக்காகும் என்றவாறு. எனவே இயற்பெயர் கூடுமாயின் புறப்பொருட் பெருந்திணையாம் என்பதாயிற்று. அவற்றுள், மடலேற்றிற்கு உதாரணம்
1. மடலேறுதல் முதலியவற்றின் விளக்கத்தைப் பின் இணைப்பினுட் காண்க.
|