288

"கழித்துறை செறியா வாளுடை யெறுழ்த்தோள்
இரவுத்துயின் மடிந்த தானை
உரவுச்சின வேந்தன் பாசறை யேமே."

என்றதனாலும் பாட்டுடைத் தலைமகன் உயர்ந்தான் ஆதல் அறிக. இதனுள், வேந்தன் என்றது பாண்டியனை, பிறவுமன்ன.

(37)

அகப்பாட்டுத் தலைமக்களுக்குக் கூறப்படும் பெயர்கள்.

247. நிலப்பெயர் வினைப்பெயர் பண்புகொள் பெயரொடு
குலப்பெயர் இயற்பெயர் கூறுப அவர்க்கே.

(இ - ம்.) தலைமக்கட்குக் கூறப்படும் பெயர்கள் இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) நிலப்பெயர் முதலாகிய ஐந்து பெயரும் கூறுவர் மேற்சொல்லப்பட்ட தலைமக்கள் இருவர்க்கும் என்றவாறு.

அவற்றுள், நிலப்பெயராவன :-மலைநாடன், சோணாடன், பாண்டியநாடன் என்றாற்போல்வனவும்; சிலம்பன், ஊரன், சேர்ப்பன் என்றாற்போல்வனவுமாம், வினைப்பெயராவன :- கடம்பெறிந்தான், தூங்கெயிலெறிந்தான், வடிம்பலம்ப நின்றான் என்றாற போல்வனவும் ; கோவலன், வேட்டுவன் என்றாற்போல்வனவுமாம். கோவலன் என்பது கோபாலன் என்னும் வடமொழித்திரிபாய் ஆப்புரத்தற்றொழின்மேல் நின்றது. வேட்டுவன் என்றது வேட்டைத் தொழிலின்மேல் நின்றது. பண்புகொள் பெயராவன :- நெடுஞ்சேரலாதன், இளஞ்சேட் சென்னி, பெருவழுதி என்றாற்போல்வனவும்; தோன்றல், அண்ணல் என்றாற்போல்வனவுமாம். குலப்பெயராவன :-சேரன், சோழன், பாண்டியன் என்றாற்போல்வனவும்; குறவன், ஆயன் என்றாற்போல்வனவுமாம். இயற்பெயராவன குரவராதியராற் பெற்ற பெயர் எனக்கொள்க.

(38)

கிளவித் தலைவனுக்குக் கூறக்கூடாத பெயர்

248. அவற்றுள்,
இயற்பெயர் கிளவித் தலைவற் கிசையார்.

(இ - ம்.) கிளவித் தலைமகற்குக் கூறாப்பெயர் இஃது என்பது உணர்த்துதல் நுதலிற்று.


1. கோவலன் என்பது, ஆக்களைக் காத்தலில் வல்லவன் எனப் பொருள் தரும் வேறு சொல்லென்று தோற்றுகின்றது.