291

முதல் கரு உரி என்னும் முத்திறப் பொருள்களின் வழுவமைதி

251. முத்திறப் பொருளும் தத்தம் திணையொடு
மரபின் வாராது மயங்கலும் உரிய.

(இ - ம்.) ஐந்திணைக்கும் உரிய பொருளின் வழுவமைதி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) முதல் கரு உரி என்னும் மூன்று கூற்றவாகிய பொருளும் தத்தமக்குரிய திணையோடு கூடிய இலக்கணமுறையின் வாராது பிற திணையோடு மயங்குதலும் உரியவாம் என்றவாறு.

அஃதென்னையெனின், பெரும்பொருளகத்து, "உரிப்பொருளல்லன மயங்கவும் பெறுமே" என்பதனாலும், உரிப்பொருட் சூத்திரத்துள், "தேருங்காலை" என்னும் இலேசினானும் பெறுதும்.

உதாரணம் :

1"கறங்கு மணிநெடுந்தேர் கண்வா ளறுப்பப்
பிறங்கு மணன்மே லலவன் பரப்ப
வறங்கூர் கடுங்கதிர் வல்விரைந்து நீங்க
நிறங்கூரு மாலை வரும்."

என்னும் நெய்தற்பாட்டினுள் முல்லைக்குரிய மாலையாகிய முதற்பொருள் மயங்கினவாறு கண்டுகொள்க.

2"அன்னாய் வாழிவேண் டன்னை."

என்னும் குறிஞ்சிப்பாட்டுள்,

"மான்கண மரமுதற் றெவிட்ட வான்கணங்
கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதர
ஏங்குவயி ரிசைய கொடுவாய் அன்றில்
ஓங்கிரும் பெண்ணை யகமட லகவப்
பாம்புமணி யுமிழப் பல்வயிற் கோவலர்
ஆம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்று."

என்புழி முல்லைக்குரிய கருப்பொருளாகிய ஆன்கணமும், பாம்பும் கோவலரும், ஆம்பற்குழலும், அதற்குரிய முதற்பொருளாகிய மாலையும், நெற்தற்குரிய கருப்பொருளாகிய அன்றிலும் பனையும் வந்தவாறு கண்டுகொள்க.


1. திணைமொழி ஐம்பது, செ : 48.

2. குறிஞ்சிப்பாட்டு, அடி : 217 -22.