பின் இணைப்பு (இந்நூல் சூ. 234) இச்சூத்திரத்துக் கூறப்பெற்ற துறையினது விளக்கத்தை அடியில் வரும் இலக்கண விளக்கத்து அகத்திணையியலின் 211-ஆம் சூத்திரத்தானும் அதன் உரையானும் உணர்க. 1"அவ்வ மாக்களும் விலங்கும் அன்றிப் பிறவவண் வரினும் திறவதின் நாடித் தத்தம் இயல்பின் மரபொடு முடியின் அத்திறந் தானே துறையெனப் படுமே." (இதன் பொருள்) ஐவகை நிலத்திற்கு உரியர் எனப்படும் பல்வேறு வகைப்பட்ட மக்களும், மாவும், புள்ளும் ஓதிவந்தவாறன்றிப் படைத்துச் செய்யினும் அவ்வத் திணைக்கேற்ற இலக்கணமும், வரலாற்று முறைமையும் பிறழாமற் செய்யின் அது மார்க்கம் எனப்படும். மார்க்கம் எனினும் துறை எனினும் ஒக்கும். 2'ஊர்க்கா னிவந்த பொதும்பருள் நீர்க்கால்.' என்னுங் கலியுள், 'கொழுநிழல் ஞாழல் முதிரிணர் கொண்டு கழும முடித்துக் கண்கூடு கூழை.' என நெய்தல் தலைமகள்போலக் கூறி, அவளை மருதநிலத்துக் கண்டான்போல, 'ஊர்க்கால் நிவந்த பொதும்பருள்' எனவுஞ் சொல்லிப், பின் குறிஞ்சிப் பொருளாகிய புணர்தல் உரிப்பொருளான் முடித்தான்; அவ்வாறு மயங்கச் செய்யினும் குறிஞ்சித் துறைப்பாற்படச் செய்தமையின் அத்துறை உறுப்பான் வந்தது என்பது.
1. இது தொல், பொருள், செய்யுள் இசூ. 209. இதனை இலக்கண விளக்க ஆசிரியர் ஆசிரியவசனமாக எடுத்துத் தமது நூலிற் சேர்த்துக்கொண்டனர். 2. கலி. குறிஞ்சிக்கலி, செ : 20.
|