297

பின் இணைப்பு

இங்ஙனம் கூறியவாற்றான் உரைப்போர் கேட்போர் உண்மை இன்றி, உரைக்குங் கவியே உரைப்பதூஉம் துறை என்னும் உறுப்பாதல் பெற்றாம்.

1"எறிதே னலம்பும் சிலம்பினெப் போது மிரந்திவள்பின்
வெறிதே திரிந்து மெலிந்தன நாமுள்ள மெல்லியற்குப்
பிறிதேகொ லென்னும் பெருந்தகை தேறப் பெரிதுயிர்த்து
வறிதே முறுவல்செய் தாடஞ்சை வாணன் வரையணங்கே."

இதனுட் கூற்றிற்கு உரியன் அல்லாத கவிகூற்றும் அதற்கு உரியார் கூற்றின்பாற் படுத்தி அடக்கப்பட்டவாறு காண்க.

இச் சூத்திரத்திற்குத் தொல்காப்பியத்தில் அதன் உரையாசிரியர்கள் கூறிய உரையையும் ஈண்டு நோக்குக.

(இந்நூல் சூ. 244.)

இச் சூத்திரத்திற் கூறிய மடலேறுதல் முதலியவற்றின் விளக்கத்தை அடியில் வருவனவற்றான் உணர்க.

1. மடல் ஏறுதலாவது, தன் குறைதீரப்பெறாத தலைமகன் பனங்கருக்காற் குதிரையும், பனையிலுள்ள மற்றவற்றான் வண்டில் முதலியனவும் செய்து, தன் உடம்பு முழுதும் நீறு பூசிக்கொண்டு, பூளைப்பூ, எலும்பு, எருக்கம்பூ ஆகிய இவற்றை மாலையாகக் கட்டித் தரித்துக்கொண்டு, அம் மாவிலேறி அதனைச் சிலர் ஈர்த்துச் செல்லவீதியிற் செல்லுதல். இதன் முழுவிளக்கத்தையும் தஞ்சைவாணன் கோவை, 101 ஆம் செய்யுளின் விசேட உரையை நோக்கி அறிக.

2. விடைதழாஅலாவது, வெல்லுந் திறலுடையனாகிய தலைமகன் தான் விழைந்த தலைமகளை மணத்தற் பொருட்டுக் கொல்லுந் திறலமைந்த ஓர் எருத்தினைப் பிடித்துத் தழுவி அடக்குதல்.
விடை - எருது; தழாஅல் - தழுவுதல்.

3. குற்றிசையாவது, கோல்வளையாளை முற்றத் துறந்த துறவாம்.

4. குறுங்கலியாவது, தன்னை முற்றத்துறந்து நீங்கிய தலைமகனைக் கோற்றொடி நங்கை முன்னின்று பழி தூற்றுதலாம்.

5. சுரநடையாவது, சுரத்திடையில் தலைவியை இழந்த தலைமகன் வருந்தும் நிலை.

6. முதுபாலையாவது, சுரத்தின்கண் தலைவனை இழந்த தலைமகள் மனம் கவன்று புலம்பும் நிலை.


1. த. கோ. செ : 15.